உள்ளூர் செய்திகள்

தருமபுரி தனியார் மருத்துவமனை முன்பு இறந்த பெண்ணின் உறவினர்கள் முற்றுகையிட்ட போது எடுத்தபடம்.

தனியார் மருத்துவமனையில் கருப்பை சிகிச்சைக்கு சேர்ந்த பெண் மூளை செயலிழப்பால் மரணம்- உறவினர்கள் மறியல்

Published On 2022-11-01 09:31 GMT   |   Update On 2022-11-01 09:31 GMT
  • மத்திய கூட்டுறவு வங்கி அருகேயுள்ள அந்த தனியார் மருத்துவமனை முன்பு திரண்ட உறவினர்கள் தவறான சிகிச்சை தான் வளர்மதியின் உயிரிழப்புக்கு காரணம் என்று கூறி மறியல் போராட்டம் நடத்தினர்.
  • அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் வட்டாட்சியர் ராஜராஜன், நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தருமபுரி:

தருமபுரி அருகேயுள்ள பெரியாம்பட்டியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி வளர்மதி. இவருக்கு கருப்பையில் ஏற்பட்ட நோய்க்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

இதையடுத்து தருமபுரி-சேலம் நேதாஜி பைபாஸ் சாலையில் மத்திய கூட்டுறவு வங்கி அருகேயுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வளர்மதி உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 22-ந்தேதியன்று வளர்மதிக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக மயக்க மருந்து செலுத்தப்பட்டதாக தெரிகிறது. ஆனால் மயக்க மருந்து செலுத்தப்பட்ட பிறகு வளர்மதியின் மூளை செயல் இழந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் கோமா நிலைக்கு சென்றார்.

வளர்மதியை மீட்பதற்கு பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டு முயற்சித்துள்ளனர்.

பல லட்ச ரூபாய் செலவழித்தும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை. இதையடுத்து சேலம் அரசு மருத்துவமனைக்கு வளர்மதியை கொண்டு சென்று சேர்த்துள்ளனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி வளர்மதி இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த வளர்மதியின் உறவினர்கள் அவரது உடலை பெற்றுக்கொண்டு தருமபுரி வந்தனர்.

பின்னர் மத்திய கூட்டுறவு வங்கி அருகேயுள்ள அந்த தனியார் மருத்துவமனை முன்பு திரண்ட அவர்கள் தவறான சிகிச்சை தான் வளர்மதியின் உயிரிழப்புக்கு காரணம் என்று கூறி மறியல் போராட்டம் நடத்தினர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் வட்டாட்சியர் ராஜராஜன், நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

Tags:    

Similar News