கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டும் ஐ.டி. நிறுவனர்- தினமும் காலையில் பழைய சோறு சாப்பிடும் ஸ்ரீதர் வேம்பு
- கொரோனா காலத்தில் பல்வேறு முக்கிய நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்த போதும், ஸ்ரீதர் வேம்புவின் நிறுவனம் குறிப்பிட்ட அளவு வருமானத்தை ஈர்த்தது.
- உலக அளவில் கவனம் பெற்று கோடிக்கணக்கான வருமானம் ஈட்டும் ஸ்ரீதர் வேம்பு எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மட்டுமே ஐ.டி. நிறுவனங்கள் தொடங்கப்பட்டு கோலோச்சி வந்தது.
கிராமப்புறங்களிலும் ஐ.டி. நிறுவனங்களை தொடங்கி வெற்றி பெற முடியும் என சாதித்து காட்டியவர் ஜோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு. இவர் உலகம் முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களில் ஐ.டி. நிறுவனங்களை நடத்தி வந்தாலும் தனது விருப்பமான கிராமப்புறங்களிலும் ஐ.டி. நிறுவனங்களை நடத்த நினைத்து தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை என்ற கிராமத்தில் ஐ.டி. நிறுவனத்தை தொடங்கி பல்வேறு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறார்.
இவரது சேவையை பாராட்டி மத்திய அரசின் உயர் பதவியான தேசிய பாதுகாப்பு குழு உறுப்பினராக ஸ்ரீதர்வேம்புவை நியமனம் செய்தது. கொரோனா காலத்தில் பல்வேறு முக்கிய நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்த போதும், ஸ்ரீதர் வேம்புவின் நிறுவனம் குறிப்பிட்ட அளவு வருமானத்தை ஈர்த்தது. உலக அளவில் கவனம் பெற்று கோடிக்கணக்கான வருமானம் ஈட்டும் ஸ்ரீதர் வேம்பு எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். தமிழர்களின் பாரம்பரிய ஆடைகளான வேஷ்டி சட்டையில் காணப்படுவார். நவீன கார்களில் செல்ல வசதி இருந்தும் பெரும்பாலும் சைக்கிள்களிலேயே சென்று வருகிறார். இத்தகைய சிறப்பு பெற்ற ஸ்ரீதர்வேம்பு கடந்த 2 நாட்களுக்கு முன்பு டுவிட்டரில் தான் பழைய சாதத்தை சாப்பிட்டு வருவதாவும், அதன் பெருமை குறித்தும் பதிவிட்டுள்ளார். அவரது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
சில வருடம் காலமாக என் காலை உணவாக பழைய சோறு மாறி உள்ளது. எனது பாரம்பரிய முறையில் இந்த உணவை நான் எடுத்து வருகிறேன். எனக்கு பல காலமாக இரிட்டபிள் பவல் சின்ட்ரோம் எனப்படும் எரிச்சலுடன் கூடிய குடல் பிரச்சினை இருந்தது. இந்த நோய் தற்போது பூரணமாக குணமடைந்து விட்டது. அத்துடன் ஒவ்வாமைகளும் இருந்தன. தற்போது அவைகளும் இல்லாமல் போனது. ஒருவேலை இந்த பதிவு சிலருக்கு உதவும்.
இவ்வாறு அந்த பதிவில் ஸ்ரீதர்வேம்பு குறிப்பிட்டிருந்தார்.
அவரது இந்த பதிவிற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சமூகவலைத்தளங்களிலும் இது பகிரப்பட்டு வருகிறது. இந்நோய் பாதிப்புள்ள பலரும் ஸ்ரீதர்வேம்புக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். சிலர் பழையசோறு, ரெசிபி கேட்டு கருத்து பதிவிடுகின்றனர். அவர்களுக்கு உதவும் விதமாக சிலர் அதுகுறித்து வீடியோக்களை இணைத்துள்ளனர்.