உள்ளூர் செய்திகள்

பின்னலாடை நிறுவனத்தின் பயங்கர தீ விபத்து

Published On 2024-09-16 06:30 GMT   |   Update On 2024-09-16 06:31 GMT
  • பின்னலாடை நிறுவனத்தின் ஒரு பகுதியில் தீப்பற்றி எரிந்துள்ளது.
  • தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர்:

திருப்பூர் நெருப்பெரிச்சல் ஜி என் கார்டன் பகுதியில் முத்துக்குமார் (55) என்பவருக்கு சொந்தமான பின்னலாடை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நேற்று விடுமுறை என்பதால் நேற்று முன்தினம் இரவு நிறுவனம் மூடப்பட்டு சென்ற நிலையில் பணிக்கு யாரும் வேலைக்கு வராததால் காவலாளி மட்டும் பணியில் இருந்துள்ளார்.

இந்நிலையில் இன்று அதிகாலை பின்னலாடை நிறுவனத்தின் உட்பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. உடனடியாக காவலாளி சென்று பார்த்த போது பின்னலாடை நிறுவனத்தின் ஒரு பகுதியில் தீப்பற்றி எரிந்துள்ளது. உடனடியாக உரிமையாளர் மற்றும் தீயானைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். நிறுவனம் முழுவதும் பின்னலாடை துணிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த காரணத்தால் மளமளவென நிறுவனம் முழுவதும் தீ பரவியுள்ளது.

திருப்பூர் வடக்கு தீயணைப்புத் துறையினர் நான்கு தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மூன்று மணி நேரத்திற்கு மேலாக பத்துக்கும் மேற்பட்ட லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

ஆனாலும் பின்னலாடை நிறுவனத்தில் உற்பத்திக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த துணிகள் மற்றும் உற்பத்தி செய்து பண்டல் போட்டு வைக்கப்பட்டிருந்த துணிகள், பின்னலாடை இயந்திரம் , கட்டிடம் என பல கோடி மதிப்பில் பொருட்கள் சேதமடைந்துள்ளது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் தீ விபத்து குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News