தமிழக காங்கிரஸ் பொதுக்குழு சென்னையில் 19-ந் தேதி கூடுகிறது
- மாநில வாரியாக வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு வாக்காளருக்கும் ‘கியூ ஆர்.’ கோடுடன் வாக்காளர் அடையாள அட்டையும் வழங்கப்படும்.
சென்னை:
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் வருகிற 24-ந் தேதி தொடங்குகிறது. 30-ந்தேதி மனு தாக்கலுக்கு கடைசி நாள் ஆகும்.
ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் போட்டியிட்டால் அடுத்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி தேர்தல் நடத்தப்படும். தலைவருக்கான தேர்தலில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பார்கள்.
மாநில வாரியாக வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்காளருக்கும் 'கியூ ஆர்.' கோடுடன் வாக்காளர் அடையாள அட்டையும் வழங்கப்படும்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அதிகாரியான மதுசூதன் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார். அதில் வருகிற 20-ந்தேதிக்குள் மாநில அளவில் பொதுக்குழு கூட்டங்களை நடத்தி மாநில தலைவர்கள், மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரத்தை அகில இந்திய தலைவருக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றி டெல்லி தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இந்தியா முழுவதும் 9300 பேர் வாக்களிப்பாளர்கள். அவர்கள் தலைவரை தேர்வு செய்வார்கள். இதற்காக மாநில வாரியாக தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளார்கள்.
தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் சோனியா ஒப்புதலுடன் நியமிக்கப்பட்டவர்கள். எனவே தலைவர் தேர்தலிலும் சோனியாகாந்தி குடும்பத்தை சேர்ந்தவர்களோ அல்லது அவர்களது ஆதரவாளர்ளோ தான் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
இதேபோல் காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்கள் 23 பேர் தேர்வு செய்யப்பட வேண்டும் அவர்களில் 12 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். 11 பேர் நியமிக்கப்படுவார்கள்.
இந்த 12 உறுப்பினர்கள் தேர்வுக்கு கூடுதலாக ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்தாலும் தேர்தல் நடைபெறும்.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சோனியா குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கே ஆதரவாக இருக்கிறார்கள். எனவே கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாக்குப்பதிவு நடத்துவதற்கான சூழல் வரவில்லை. எனவே யாரும் வாக்கு பதிவுக்கு ஆர்வம் காட்டுவதும் இல்லை. தேர்தலில் போட்டியிடவும் தயாராவதில்லை.
ஆனால் இந்த முறை இதுவரை ராகுல் போட்டியிடுவது பற்றி அறிவிக்கவில்லை. சசிதரூர் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். இதனால் தான் வாக்குப்பதிவு நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
வாக்காளர்கள் பட்டியல் நேற்று இரவு வெளியிடப்பட்டது. தமிழகத்தில் சுமார் 800 பேர் வாக்காளர்களாக இருக்கிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும் தமிழக காங்கிரஸ் சார்பில் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. வருகிற 19-ந்தேதி (திங்கள்) மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் மாநில தலைவர் ஆகியோரை தேர்வு செய்யும் அதிகாரத்தை அகில இந்திய தலைமைக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இந்த தீர்மானம் உடனடியாக டெல்லி தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும்.