திருவொற்றியூரில் ரெயில் மோதி 2 பெண்கள் பலி
- ரவிச்சந்திரனும் சக்தியும் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து மின்சார ரெயில் மூலம் திருவொற்றியூருக்கு அழைத்து வந்தனர்.
- திருவொற்றியூர் ரெயில் நிலையத்தில் இறங்கி தண்டவாளத்தை கடக்க முயன்றனர்.
திருவொற்றியூர்:
திருவொற்றியூர், ரெயில்வே சாலை பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி சக்தி(வயது 21). இவர்களது மகள் சேவா. இவருக்கு இன்று முதல் பிறந்தநாள் ஆகும். இதை கொண்டாட சக்தியின் பாட்டி ராஜேஸ்வரி (71) மற்றும் சக்தியின் தாய் கங்கம்மாள், அவரது அக்காள் ஜெயம்மாள் ஆகியோர் பெங்களூரில் இருந்து பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் மூலம் சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்தனர்.
பின்னர் அவர்களை ரவிச்சந்திரனும் சக்தியும் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து மின்சார ரெயில் மூலம் திருவொற்றியூருக்கு அழைத்து வந்தனர். அவர்கள் திருவொற்றியூர் ரெயில் நிலையத்தில் இறங்கி தண்டவாளத்தை கடக்க முயன்றனர்.
அந்தப் பகுதி இருட்டாக இருந்ததாலும் மேலும் வயதான ராஜேஸ்வரியும் ஜெயம்மாளும் தண்டவாளத்தில் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் சென்ட்ரலில் இருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் வந்தது. இதனை பார்த்த சக்தி தண்டவாளத்தில் நடந்து வந்து கொண்டிருந்த ராஜேஸ்வரியையும் ஜெயம்மாளையம் காப்பாற்றுவதற்காக ஓடிவந்தார்.
அப்போது அவர்கள் 3 பேர் மீதும் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது. இதில் சக்தி, மற்றும் அவரது பாட்டி ராஜேஸ்வரி ஆகிய 2பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
ஜெயம்மாள் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினார். அவருக்கு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.