வள்ளலார் சித்தி பெற்ற திரு அறை தரிசனம்- ஆயிரக்கணக்கானவர்கள் தரிசனம்
- சித்தி வளாகத்தில் (மேட்டுக்குப்பத்தில்) பல சன்மார்க்க சங்கத்தின் சார்பில் சன்மார்க்க சொற்பொழிவுகள், அன்னதானமும் நடைபெற்றன.
- நிகழ்ச்சி ஏற்பாடுகளை தெய்வநிலைய நிர்வாக அதிகாரி ராஜா சரவணகுமார், மற்றும் மேட்டுக்குப்பம்கிராம மக்கள் செய்து இருந்தனர்.
வடலூர்:
வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 153-வது ஆண்டு தைப்பூச திருவிழா ஜோதி தரிசனம் கடந்த 25-ந்தேதி நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்தில் திருவறை தரிசனத்தையொட்டி வடலூர் சத்திய ஞான சபையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் கொண்ட பெட்டி (பேழை) மற்றும் உருவப்படத்தை பூக்களால் அலங்கரித்து வள்ளலார் நடந்து வந்த பாதை வழியே மேளதாளம் முழங்க ஊர்வலம் தொடங்கியது.
இதனை கருங்குழி கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் சமூகத்தினர் தோளில் சுமந்து கொண்டு ஊர்வலமாக புறப்பட்டனர். வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் கொண்டு சென்ற போது வழியில் வடலூர், பார்வதிபுரம் கிராம மக்களும் இதைத்தொடர்ந்து செங்கால் ஓடையில் நைனார்குப்ப கிராமத்தை சேர்ந்தவர்களும், பூக்கள், பழங்களுடன் வரவேற்றனர்.
இவர்கள் செல்லும் வழியில் கருங்குழி கிராமத்தினரும் பழங்களுடன் வரவேற்றனர். கருங்குழியில் வள்ளலார் வழிபட்ட விநாயகர் கோவிலிலும், பொதுமக்கள் சார்பில் வழிபாடு செய்யப்பட்டது.
தொடர்ந்து வள்ளலார் தண்ணீரால் விளக்கு எரித்த ரெட்டியார் இல்லத்தில் வைத்து வழிபாடு செய்யப்பட்டு பின்னர் வள்ளலார் வழிபாடு செய்த லட்சுமி நாராயணபெருமாள் கோவிலிலும் வரவேற்பளிக்கப்பட்டது.
மேட்டுக்குப்பம் தீஞ்சுவை ஓடையில் உள்ள மண்டபத்தில் கருங்குழி ஜெம்புலிங்கம் படையாட்சி குடும்பத்தினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட் டது. பின்னர் மேட்டுக்குப்பம் வள்ளலார் சித்தி பெற்ற திருஅறை உள்ள சித்திவளாக திருமாளிகை கொண்டு செல்லப்பட்டது. அங்கு கிராம மக்கள் தாம்பாளதட்டில் பழம் பூக்களுடன் திரண்டு வந்து வரவேற்பளித்தனர்.
பின்னர் வள்ளலார் சித்தி பெற்ற திருஅறையினுள் கொண்டு செல்லப்பட்டது. அறைக்கும் முன்வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து வள்ளலார் சித்தி பெற்ற திருஅறை தரிசனம் தொடங்கியது,
பகல் 12 மணி அளவில் தொடங்கிய தரிசனம் மாலை 6 மணி வரை நடக்கிறது.
இதனை பல ஆயிரக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் பார்த்து பரவசம் அடைந்தனர்.
திரு அறை தரிசனத்தை ஒட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. நெய்வேலி போலீஸ் சரகத்தின் சார்பில் டி.எஸ்.பி. சபிபுல்லா, மேற்பார்வையில் வடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் கள், போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சித்தி வளாகத்தில் (மேட்டுக்குப்பத்தில்) பல சன்மார்க்க சங்கத்தின் சார்பில் சன்மார்க்க சொற்பொழிவுகள், அன்னதானமும் நடைபெற்றன.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை தெய்வநிலைய நிர்வாக அதிகாரி ராஜா சரவணகுமார், மற்றும் மேட்டுக்குப்பம்கிராம மக்கள் செய்து இருந்தனர்.