உள்ளூர் செய்திகள்

விருத்தாசலம் அருகே பாசன வாய்க்காலில் தலைகீழாக கவிழ்ந்த அரசு பஸ்- 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

Published On 2023-01-23 15:40 IST   |   Update On 2023-01-23 15:40:00 IST
  • விருத்தாசலத்திற்கு தடம் எண் 22 அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது.
  • பஸ் கோ.மங்கலம் கிராமம் வழியாக சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.

விருத்தாசலம்:

விருத்தாசலம் அருகே சேப்பாக்கம் கிராமம் உள்ளது. இங்கிருந்து விருத்தாசலத்திற்கு தடம் எண் 22 அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது.

இந்த பஸ்சானது சேப்பாக்கத்தில் இருந்து புறப்பட்டு நல்லூர் வழியாக விருத்தாசலம் வந்தடையும். இக்கிராமத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், பல்வேறு பணிகளுக்காக விருத்தாசலம் செல்லும் தனியார், அரசு ஊழியர்கள் இந்த டவுன் பஸ்சில் தான் செல்லவேண்டும்.

அதன்படி இன்று காலை 7 மணிக்கு இந்த பஸ் சேப்பாக்கம் கிராமத்தில் இருந்து புறப்பட்டது. இந்த பஸ்சினை டிரைவர் சரவணன் (வயது 40) ஓட்டினார். பஸ்சில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

இந்த பஸ் கோ.மங்கலம் கிராமம் வழியாக சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. தறிகெட்டு ஓடிய அந்த பஸ் சாலை ஓரம் பாசன வாய்க்காலில் தலைக்குப்புற கவிழ்ந்தது.

இதனால் பஸ்சில் வந்த பயணிகள், மாணவ-மாணவிகள் உயிர் பிழைக்க கூச்சல் போட்டனர்.சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக அங்கு ஓடி வந்தனர். இது குறித்து விருத்தாசலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் தீயணைப்புத் துறை, போக்குவரத்து துறை மற்றும் 108 ஆம்புலன்ஸ் போன்றவைகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார், தீயணைப்பு நிலைய அலுவலர் மணி தலைமையிலான வீரர்கள் தலைகுப்புற கவிழந்த பஸ்சில் இருந்த பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

இவர்கள் அனைவரையும் ஏற்றிச் செல்லும் அளவிற்கு 108 ஆம்புலன்ஸ் கிடைக்காததால், அவ்வழியே மோட்டார் சைக்கிளில் சென்றவர்களும் படுகாயமடைந்தவர்கள் ஏற்றிச் சென்றனர். இவர்கள் அனைவரும் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அப்போது அவ்வழியே வந்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தனது காரினை நிறுத்திவிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும், கூடுதல் ஆம்புலன்ஸ் வரவழைக்கவும், போக்குவரத்து சீர்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இச்சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News