சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் நடுவானில் மாரடைப்பால் உயிரிழந்த விருதுநகர் பயணி
- விமான பணியாளர்கள் அந்தப் பயணியை தட்டி எழுப்ப முயற்சி செய்தனர்.
- நடுவானில் விமான பயணி உயிரிழந்த சம்பவம் சக பயணிகளுக்கு கடும் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்தது.
கே.கே. நகர்:
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய், சார்ஜா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் ஸ்கூட் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, மலிண்டோ, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட விமான நிறுவனங்களின் விமானங்கள் பெருமளவு இயக்கப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து ஒரு ஸ்கூட் விமானம் திருச்சி வந்தடைந்தது.
பின்னர் பயணிகள் அனைவரும் ஒவ்வொருவராக இறங்கினர். ஆனால் ஒருவர் மட்டும் வெகு நேரம் ஆகியும் இருக்கையில் இருந்து எழுந்திருக்கவில்லை.
அதைத்தொடர்ந்து விமான பணியாளர்கள் அந்தப் பயணியை தட்டி எழுப்ப முயற்சி செய்தனர். ஆனால் அவர் எந்த பேச்சு மூச்சும் இல்லாமல் இருந்தார். அதைத்தொடர்ந்து விமான நிலைய மருத்துவ குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த மருத்துவ குழுவினர் விரைந்து வந்து அந்தப் பயணியை இறக்கி பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது அவர் உயிரிழந்திருப்பது அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
விசாரணையில், நடுவானில் உயிரிழந்த அந்த பயணி விருதுநகரைச் சேர்ந்த முனியசாமி (வயது 36) என்பது தெரியவந்தது.
கடந்த ஓராண்டுக்கு முன்பு அவர் பணி நிமித்தமாக சிங்கப்பூர் சென்றார். பின்னர் ஊர் திரும்பும்போது மாரடைப்பினால் விமானத்தில் உயிரிழந்ததாக ஏர்போர்ட் போலீசார் தெரிவித்தனர். இறந்த பயணியின் உடல் இன்று திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. நடுவானில் விமான பயணி உயிரிழந்த சம்பவம் சக பயணிகளுக்கு கடும் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்தது.