உள்ளூர் செய்திகள்

போலீஸ் அதிகாரி எனக்கூறி வாகனங்களை ஆய்வு செய்த வாலிபர்- எச்சரித்து அனுப்பிய போலீசார்

Published On 2024-11-15 06:15 GMT   |   Update On 2024-11-15 06:15 GMT
  • போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோபால் தலைமையில் அங்கு போலீசார் வந்தனர்.
  • போலி அதிகாரி என கூறி வாகன தணிக்கையில் ஈடுபட்ட சம்பவமும் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி:

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே வாக்கி டாக்கியை வைத்துக் கொண்டு தான் போலீஸ் அதிகாரி என கூறி ஒருவர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார். ஆனால் அவரது நடவடிக்கையில் பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனையடுத்து அவரது புகைப்படத்தை எடுத்து தேனி காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வீரபாண்டி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோபால் தலைமையில் அங்கு போலீசார் வந்தனர்.

அவர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்ட நபரிடம் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல் அளித்தார். மேலும் அவர் குடிபோதையில் இருந்ததும் தெரிய வந்தது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் அல்லிநகரத்தைச் சேர்ந்த வீனஸ் கண்ணன் என தெரிய வரவே போலீசார் அவரிடம் எச்சரிக்கை செய்து இனி இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கம்பம் பஸ் நிலையத்தில் கண்டக்டர் சீருடையுடன் ஒருவர் பயணிகளுக்கு டிக்கெட்டுகளை கொடுத்து விட்டு பணத்துடன் தப்பிச் சென்ற சம்பவத்தில் ஒருவரை கைது செய்தனர்.

அதே போன்று மீண்டும் போலி அதிகாரி என கூறி வாகன தணிக்கையில் ஈடுபட்ட சம்பவமும் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News