உள்ளூர் செய்திகள்

முன்விரோதத்தில் கட்டிட தொழிலாளி அடித்துக்கொலை

Published On 2024-11-15 09:30 GMT   |   Update On 2024-11-15 09:30 GMT
  • மறுநாள் ஜெயன் கடைக்கு சென்றபோது ராஜாசிங் அவரிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
  • ராஜாசிங் கம்பியை எடுத்து வந்து ஜெயனை சரமாரியாக தாக்கினார்

இரணியல்:

இரணியல் அருகே கண்டன்விளை பாலவிளை பகுதியை சேர்ந்தவர் ஜெயன் (வயது 44), கட்டிட தொழிலாளி. கண்டன்விளையை சேர்ந்தவர் ராஜாசிங் (32). வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.

இவர்கள் இருவரும் நண்பர்கள். இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த மாதம் 6-ந்தேதி அந்த பகுதியில் உள்ள ஆலயத்தில் வைத்து தகராறு ஏற்பட்டது. அப்போது அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் மறுநாள் ஜெயன் கடைக்கு சென்றபோது ராஜாசிங் அவரிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.

ஜெயன் மீது ராஜாசிங் இரணியல் போலீசில் புகார் செய்தார். போலீசார் இருவரையும் அழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் ஜெயன் கட்டிட வேலைக்காக கேரளாவுக்கு சென்றார். வேலைக்கு சென்ற ஜெயன் தற்பொழுது ஊருக்கு வந்துள்ளார்.

நேற்று ஜெயன் கண்டன்விளை மீன் மார்க்கெட் பகுதியில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ராஜா சிங், ஜெயனிடம் தகராறில் ஈடுபட்டார். அவர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டதுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

வீட்டிற்கு சென்ற ராஜாசிங் கம்பியை எடுத்து வந்து ஜெயனை சரமாரியாக தாக்கினார். இதில் ஜெயனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. சம்பவ இடத்திலேயே ஜெயன் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து ராஜாசிங் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து இரணியல் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணமாக கிடந்த ஜெயனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஜெயனின் மனைவி ஜெமிலா இரணியல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ராஜாசிங் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று காலை ராஜாசிங்கை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவரை இரணியல் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட ஜெயனின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது.

அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கே திரண்டு உள்ளனர். கொலை செய்யப்பட்ட ஜெயனுக்கு ஜெமிலா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜாசிங் போலீசாரிடம் கூறுகையில், நானும் கொலை செய்யப்பட்ட ஜெயனும் நண்பர்கள். நாங்கள் அடிக்கடி ஒன்றாக மது அருந்துவது வழக்கம். கடந்த மாதம் மது அருந்தி கொண்டிருந்தபோது எனது தாயாரை பற்றி ஜெயன் அவதூறாக பேசினார். இதனால் எனக்கும், அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அவருடன் இருந்த நட்பை துண்டித்தேன். தொடர்ந்து எனது தாயாரை அவதூறாக பேசி வந்தார். நேற்று ஜெயன் அவதூறாக பேசியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரை கொன்றேன் என்றார்.

Tags:    

Similar News