உள்ளூர் செய்திகள்

பூண்டி ஏரிக்கு நீர் வரத்து 460 கன அடியாக அதிகரிப்பு

Published On 2024-11-15 10:30 GMT   |   Update On 2024-11-15 10:30 GMT
  • வடகிழக்கு பருவமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
  • பூண்டி ஏரி நீர் பிடிப்பு பகுதியில் அவ்வப்போது பலத்த மழை கொட்டி வருகிறது.

ஊத்துக்கோட்டை:

சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரியின் உயரம் 35 அடியாகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கலாம். ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் படி கடந்த செப்டம்பர் 23-ந் தேதி முதல் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதேபோல் பூண்டி ஏரி நீர் பிடிப்பு பகுதியில் அவ்வப்போது பலத்த மழை கொட்டி வருகிறது.

இதனால் தற்போது பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு மழை நீர் 260 கனஅடி, கிருஷ்ணா நீர் 200 கன அடி என மொத்தம் வினாடிக்கு 460 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. ஏரியில் மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கனஅடியில் 465 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 350 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

அதே போல் சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 17 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. செப்டம்பர் 23-ந் தேதியிலிருந்து இன்று காலை வரை கிருஷ்ணா நீர் 1.237 டி.எம்.சி. வந்து சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்றும் பரவலாக மழை கொட்டியது.

Tags:    

Similar News