போக்குவரத்து கழக பணிமனைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப விரைவில் முதல்-அமைச்சர் அறிவிப்பு வெளியிடுவார்- அமைச்சர் சிவசங்கர் பேச்சு
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் போக்குவரத்து கழகம் தன்னிறைவு பெற்று வருகின்றது.
- கேரளாவில் தொழிலாளர் களுக்கு சம்பளம் வழங்குவது 15 நாட்கள் முதல் 30 நாட்களுக்கு மேல் ஆகிறது.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு போக்குவரத்து பணிமனையில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் பணியாளர்கள் ஓய்வறை அமைக்கும் பணி மற்றும் தென்காசி எம்.பி. நிதியில் இருந்து ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் தானியங்கி சுத்தப்படுத்தும் எந்திரம் அமைக்கும் பணி தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
தன்னிறைவு பெற்றுள்ளது
தென்காசி கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி, சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி, மாவட்ட ஊராட்சி துணை தலைவர் உதய கிருஷ்ணன், சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் தமிழ்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் மோகன் வரவேற்று பேசினார். எம்.எல்.ஏ.க்கள் சங்கரன்கோவில் ராஜா, வாசுதேவநல்லூர் சதன்திருமலைகுமார், தனுஷ்குமார் எம்.பி. ஆகியோர் வாழ்த்தி பேசினர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது:-
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சீரழிவை சந்தித்த போக்குவரத்து கழகம் தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தன்னிறைவு பெற்று வருகின்றது. மகளிருகான இலவச பஸ் சேவை மூலம் ஏற்படும் இழப்பீட்டிற்கான தொகை கடந்த ஆண்டு ரூ. 1,800 கோடியும், இந்த ஆண்டில் ரூ. 2,800 கோடியும் அரசு போக்குவரத்து கழகத்திற்கு முதல்-அமைச்சர் கொடுத்துள்ளார்.
புதிய பணியிடங்கள்
இப்போது நமது அண்டை மாநிலமான கேரளாவில் தொழிலாளர் களுக்கு சம்பளம் வழங்குவது 15 நாட்கள் முதல் 30 நாட்களுக்கு மேல் ஆகிறது. ஆனால் தமிழகத்தில் 1-ந் தேதியே முறையாக சம்பளம் வழங்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் புதிய ஓட்டுநர், நடத்துனர் நியமிக்கவில்லை. இப்போது முதல்-அமைச்சர் முதல் முறையாக அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கும், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கும் புதிய பணியிடங்களை நிரப்ப உத்தரவிட்டுள்ளார்.
இன்னும் சில மாதங்களில் அனைத்து பணிமனைகளிலும் காலியிடங்கள் நிரப்ப முதல்-அமைச்சர் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார். போக்குவரத்து துறையில் முதல்-அமைச்சர் பல்வேறு திட்டங்களை அறிவித்து வரும் நிலையில் போக்குவரத்து பணியாளர்களும் தங்கள் பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் சரவணன், வணிகத்துறை மேலாளர் சுப்ரமணியன், மேற்கு மேலாளர் சண்முகையா, சங்கரன்கோவில் பணிமனை மேலாளர் குமார், தொ.மு.ச. பொது செயலாளர் தர்மன், மாவட்ட அமைப்பு செயலாளர் மைக்கேல் நெல்சன், மாவட்ட பொருளாளர் முருகன், துணை பொதுச்செயலாளர் விஷ்ணு, தி.மு.க. நகர செயலாளர் பிரகாஷ், அந்தோணி ராஜ், பேரூர் செயலாளர் மாரிமுத்து, தொ.மு.ச. சங்கரன்கோவில் கிளை செயலாளர் சங்கர்ராஜ், தலைவர் குருசாமி ராஜ் மற்றும் தொ.மு.ச.வை சார்ந்த செந்தில்குமார், வீரகுமாரன், மாரிசாமி, திருப்பதி, கிறிஸ்டோபர், ஸ்தோவான், செந்தாமரைக்கண்ணன், வெள்ளத்துரை, பிரபு, ராஜாராம், முருகன், தி.மு.க. சார்பு அணி அமைப்பாளர்கள் சந்திரன், அப்பாஸ் அலி, மற்றும் தொண்டரணி முத்துகிருஷ்ணன், நகர துணைச் செயலாளர் கே.எஸ்.எஸ். மாரியப்பன், வக்கீல்கள் ஜெயக்குமார் சதீஷ் இளைஞர் அணி சரவணன், முகேஷ் மாவட்ட பிரதிநிதி செய்யது அலி, தகவல் தொழில்நுட்ப பிரிவு குமார், ராஜ், சிவாஜி, ஜெயக்குமார், வீரமணி, ஜான், பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.