3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் ரத்த பரிசோதனை அவசியம்
- கலெக்டர் தகவல்
- கொசு கடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் பரவுகிறது
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் டெங்கு காய்ச்சலில் இருந்து காத்துக்கொள்ள வீடுகளை சுத்தமாக வைத்து தண்ணீர் சேகரிக்கும் பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும் என கலெக்டர் பா.முருகேஷ் கேட்டுக்கொண்டார்.
தற்போது பருவமழை மற்றும் பருவநிலை மாற்றத்தால் தொற்று நோய்களான டெங்கு, சிக்கன்குனியா, லேப்டோஸ்பைரோசிஸ், ஸ்க்ரப்டைப்பஸ் போன்ற தொற்று நோய்கள் உருவாகலாம்.
நோய் தொற்றை தடுக்கும் பொருட்டு வீடு வீடாக சென்று கொசு மருந்து தெளித்தல், தண்ணீரில் உள்ள குளோரின் அளவை ஆய்வு செய்தல், சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தி ரத்த பரிசோதனைகள் செய்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
ஏ.டி.எஸ். எனும் கொசு கடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் பரவுகிறது.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபரை கடிக்கும் ஏடிஸ் கொசு, ஆரோக்கியமாக உள்ள நபரை கடிப்பதால் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. ஏடிஸ் கொசு என்பது சுத்தமான தண்ணீரில் உற்பத்தியாகிறது.
தண்ணீரை சேமித்து வைக்கும் சிமெண்ட் தொட்டி, டிரம், குடங்கள், மண்பாண்டங்கள், டயர்கள், தேங்காய் மட்டைகள், உரல், ஆட்டுக்கல், உபயோகமற்ற பிளாஸ்டிக் கப்புகள், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, கீழ்நிலை நீர் தேக்க தொட்டி, குளிர்சாதன பெட்டி, ஏர்கூலர் போன்றவற்றிலிருந்தும் கொசு உற்பத்தியாகும்.
காய்ச்சல் ஏற்பட்ட நபர்கள் சுயமாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரிகளுக்கு சென்று சிகிச்சை பெறலாம்.
காய்ச்சல் 3 நாட்களுக்கு மேல் நீடித்தால் ரத்த பரிசோதனை செய்ய வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.