உள்ளூர் செய்திகள்

ஜல்லிகள் பெயர்ந்த சாலையால் பொதுமக்கள் கடும் அவதி

Published On 2023-08-11 14:49 IST   |   Update On 2023-08-11 14:49:00 IST
  • பாதசாரிகள் தடுமாறி கீழே விழுந்து காயங்கள் ஏற்படும் அபாயம்
  • 10 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படாமல் உள்ளதாக புகார்

திருவண்ணாமலை:

போக்குவரத்து தடங்களின் முதன்மையானது சாலை போக்குவரத்து. மக்கள் தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குச்சென்று வருவதற்கு பெரிதும் துணையாக இருப்பது சாலை போக்குவரத்தே.

இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த போக்குவரத்து சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படாமல் கவனிப்பாரின்றி இருப்பது அப்பகுதி மக்களையும், சமூக ஆர்வலர்களையும் வேதனையடையச் செய்துள்ளது.

வேலூர் மாவட்டம், கணியம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட வேப்பம்பட்டு ஊராட்சி, கிருஷ்ணாவரம் பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்கு 1200-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதி மக்களின் போக்குவரத்துக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி நிர்வாகம் சார்பில் புதியதாக தார் சாலை அமைக்கப்பட்டது.

முறையான பராமரிப்பு இல்லாததால், இந்த தார் சாலை தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது. குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்காற்ற நிலையில் கிடக்கும் இந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் யாருக்கேனும் உடல்நலம் பாதிக்கப்பட்டால், அவர்களை மருத்துவமனைக்கு வாகனங்களில் அழைத்துச்செல்லும்போது, மிகுந்த சிரமத்துடனேயே செல்ல வேண்டியுள்ளதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

சேதமடைந்த இந்தச் சாலையை தவிர கிருஷ்ணாபுரம் பகுதி மக்கள் சென்று வர மாற்றுச் சாலை எதுவும்

இல்லை. அதேபோல் சாலை ஓரம் முட்புதர்கள் அதிக அளவில் வளர்ந்து கிடப்பதால் இரவு நேரங்களில் பாம்பு விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அந்த சாலையில் செல்வோர் மிகவும் அச்சத்துடன் பயணிக்கும் சூழல் உள்ளது.

நடந்து செல்லக்கூட முடியாத அளவிற்கு சாலைகள் மோசமாக உள்ள நிலையில், அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் செல்ல முடியாத சூழல் நிலவி வருகிறது. இதனால் இவ்வழியே செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி நின்றுவிடுகின்றன. மருத்துவமனை செல்லும் நோயாளிகள் வேலைக்கு செல்வோர் மற்றும் பள்ளி குழந்தைகள் பள்ளிக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் பரிதவிக்கின்றனர்.

இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-

ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடக்கும் கரடு முரடான சாலையில் வாகனங்களில் செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. அவசர நேரத்தில் செல்லும்போது வாகனங்கள் பஞ்சர் ஆகி நடு வழியில் நின்று விடுவதால் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியவில்லை. அரசு பள்ளி மருத்துவமனை உள்ளிட்ட வசதிகள் இல்லை. நாங்கள் ரேஷன் உள்ளிட்டு அத்தியாவசிய பொருட்கள் வாங்க சுமார் 2 கிலோமீட்டர் தொலைவு பழுதடைந்துள்ள இந்த சாலை வழியாக தான் செல்ல வேண்டும். பஸ் போக்குவரத்து இல்லாததால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் நோயாளிகள் நடந்துதான் வேப்பம்பட்டு பஸ் நிறுத்தத்திற்கு சென்று, அங்கிருந்து பஸ் மூலம் செல்கின்றனர். இரவு நேரத்தில் சாலையில் நடந்து வருபவர்கள் பாதுகாப்பிற்காக தெருவிளக்குகள் கூட அமைக்கப்படவில்லை.

இரவு நேரத்தில் குண்டு குழியுமான சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் தடுமாறி கீழே விழுந்து காயங்கள் ஏற்படும் நிலை தொடர்ந்து காணப்படுகிறது.

பழுதடைந்து கிடக்கும் இந்த சாலையை சீரமைத்தால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News