கொலை முயற்சி வழக்கில் கைதான 3 போ் மீது குண்டா் சட்டம் பாய்ந்தது
- பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை தொடா்பாக சதாம் உசேன் நண்பா்கள் வெட்டிக்கொலை செய்ய முயன்றனா்.
- பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.
திருப்பூர் :
திருப்பூா் சாமுண்டிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சதாம் உசேன். பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை தொடா்பாக அவரது நண்பா்கள் 5 போ் சோ்ந்து கடந்த மே 27 ந்தேதி வெட்டிக்கொலை செய்ய முயன்றனா்.இது குறித்து திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்தில் சதாம் உசேன் புகாா் அளித்தாா்.
வழக்குப்பதிவு செய்த போலீசார் அஜ்மீா் காஜா (39), உதயகுமாா் (21), முகமது ஹக்கீம் (39), ரியாஸ் (20), அப்துல் சமத் ஆகிய 5 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில் அஜ்மீா் காஜா, முகமது ஹக்கீம், ரியாஸ் ஆகியோா் மீது அனுப்பா்பாளையம், சென்னை மாதவரம், மங்கலம், 15 வேலம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.இதையடுத்து, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தொடா் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாநகரக் காவல் ஆணையா் ஏ.ஜி.பாபு உத்தரவிட்டாா்.இந்த உத்தரவின் நகல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 பேரிடமும் திருமுருகன்பூண்டி காவல் துறையினா் நேரில் வழங்கினா்.