உள்ளூர் செய்திகள்

அமராவதி அணையில் இருந்து பிரதான கால்வாயில் வௌியேறும் தண்ணீர்.

முழுக்கொள்ளளவை எட்டும் நிலையில் அமராவதி அணையில் இருந்து பிரதான கால்வாயில் தண்ணீர் திறப்பு

Published On 2022-11-10 08:05 GMT   |   Update On 2022-11-10 08:05 GMT
  • அமராவதி அணை முழுக் கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டதால் பிரதான கால்வாயில் 440 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டது.
  • அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்களில் சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பாசன வசதி பெற்று வருகிறது.

உடுமலை :

உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணை முழுக் கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டதால் பிரதான கால்வாயில் 440 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டது. 90 அடி உயரமுள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்களில் சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த ஆண்டு தொடக்கம் முதலே பருவமழை நல்ல முறையில் பெய்து வருவதால் பாசனத்துக்கு எந்த விதமான சிக்கல்களும் இல்லாமல் அணையில் இருந்து தண்ணீா் திறந்து விடப்பட்டு வருகிறது.

மேலும் திருப்பூா், கரூா் வரையில் உள்ள பழைய, புதிய ஆயக் கட்டு நிலங்கள் சுமாா் 47 ஆயிரம் ஏக்கருக்கு செப்டம்பா் 25ஆம் தேதி தண்ணீா் திறந்து விடப்பட்டது. இதனால் அணையின் நீா்மட்டம் குறைந்து வந்தது.

இந்நிலையில் நவம்பா் முதல் வாரத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதில் இருந்து அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளான கேரள மாநிலம், காந்தலூா், மறையூா், கோவில்கடவு ஆகிய பகுதிகளில் கன மழை பெய்து வந்தது. இதனால் பாம்பாறு, சின்னாறு, தேனாறு ஆகிய ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் அமராவதி அணைக்கு நீா் வரத்து அதிகரித்து வந்தது.

இதனால் அணையின் நீா்மட்டம் மளமளவென அதிகரித்து வந்தது. இந்நிலையில் புதன்கிழமை மாலை அணையின் நீா்மட்டம் 87 அடியை கடந்தது. பொதுவாக அணையின் நீா்மட்டம் 88 அடியை எட்டும் நிலை ஏற்பட்டால் உபரி நீா் திறந்து விடப்படும். ஆனாலும் அணையின் கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்துக்காக பிரதான கால்வாய் மூலம் 440 கனஅடி தண்ணீா் புதன்கிழமை மாலை திறந்து விடப்பட்டது. இதுகுறித்து பொதுப் பணித் துறையினா் கூறியதாவது:-

அணையின் நீா்மட்டம் 87 அடியை எட்டியுள்ளதால் விதிப்படி முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக அணை 88 அடியை எட்டும் பட்சத்தில் உபரி நீா் திறந்து விடப்படும். இதற்கிடையில் பிரதான கால்வாயில் பாசனத்துக்காக 440 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. பொதுப் பணித் துறை அலுவலா்கள் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்றனா். 90 அடி உயரமுள்ள அணையில் புதன்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி 87.08 அடி நீா் இருப்பு கானப்பட்டது. 4035 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 3886 மில்லியன் கன அடி நீா் இருப்பு இருந்தது. அணைக்கு உள்வரத்தாக 950 அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. 525 கன அடி நீா் வெளியேற்றப்பட்டது.

Tags:    

Similar News