பொங்கலூர் அருகே லாரிகள் சிறைபிடிப்பு
- ரெடிமிக்ஸ் சிமெண்டு கான்கிரீட் கலவை தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளது.
- விபத்துகள் ஏற்படுவதாக அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
பல்லடம் :
பொங்கலூர் அருகே பெருந்தொழுவு பகுதியில் ரெடிமிக்ஸ் சிமெண்டு கான்கிரீட் கலவை தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளது. இங்கிருந்து புதிய கட்டிடங்களுக்கு லாரிகள் மூலம் ரெடி மிக்ஸ் கொண்டு செல்லப்படுகிறது. அவ்வாறு கொண்டு செல்லப்படும் போது அந்த லாரிகள் அதிவேகமாக செல்வதாகவும், சாலைகள் அடிக்கடி பழுதாவதாகவும், விபத்துகள் அடிக்கடி ஏற்படுவதாகவும் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில் நேற்று ராமலிங்கபுரம் பகுதியில் வந்த 2 லாரிகளை அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தடுத்து நிறுத்தி சிறைபிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரெடிமிக்ஸ் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது லாரிகளை மெதுவாக இயக்குவதாகவும், சேதம் அடைந்த சாலைகளை செப்பனிட்டு தருவதாகவும் உறுதியளித்தார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் லாரிகளை விடுவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.