உடுமலை பகுதியில் 4 வழி சாலை பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு
- 3,649 கோடி ரூபாய் மதிப்பில் புதிய நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது.
- 106.693 கி.மீ., புறவழிச்சாலையாக அமையும் வகையில் திட்ட வடிவமைப்பு உள்ளது.
உடுமலை :
மத்திய அரசின் பாரத் மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி - திண்டுக்கல் கமலாபுரத்தை இணைக்கும் வகையில் நான்கு வழிச்சாலை திட்டம் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது.மத்திய அரசு 40 சதவீதம், தனியார் 60 சதவீதம் என்ற அடிப்படையில் 3,649 கோடி ரூபாய் மதிப்பில் புதிய நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது.
பொள்ளாச்சி - மடத்துக்குளம் 50.07 கி.மீ., மடத்துக்குளம் - ஒட்டன்சத்திரம் 45.38 கி.மீ., ஒட்டன்சத்திரம் - கமலாபுரம் 36.51 கி.மீ., என 131.96 கி.மீ., சாலை அமைக்கவும், இதில் 106.693 கி.மீ., 80 சதவீதம் புறவழிச்சாலையாக அமையும் வகையில் திட்ட வடிவமைப்பு உள்ளது.இத்திட்டத்தின் கீழ் மடத்துக்குளம் முதல் திண்டுக்கல் கமலாபுரம் வரை பெரும்பாலான பணிகள் நிறைவு பெற்று போக்குவரத்திற்கு தயாராக உள்ளது.
அதே போல் பழநி சண்முகநதி, அமராவதி ஆறுகளின் குறுக்கேயும் இரண்டு ரெயில்வே பாலங்கள், 46 சிறு பாலங்கள், 490 மிகச்சிறு பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 47 கி.மீ.,க்கு அணுகுசாலை, 146 பஸ் ஸ்டாப்கள், நான்கு கனரக வாகன ஓய்விடங்கள் அமையும் வகையில் திட்ட வடிவமைப்பு உள்ளது.இத்திட்டத்தின்கீழ் பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளில் பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது. அதிலும் உடுமலை - தாராபுரம் ரோட்டை கடக்கும் வகையில் உள்ள பாலம் வழக்கு காரணமாக நிலுவையில் உள்ளது.
ஏற்கனவே திட்ட பணிகள் நிறைவு பெறும் காலக்கெடு முடிந்துள்ள நிலையில் இன்னும் பணிகள் நிறைவு பெறாமல் இழுபறியாகி வருகிறது. அதிவிரைவு சாலை பணிகள் தாமதத்தால் பிரதான ரோடுகளில் போக்குவரத்து பாதிப்பு, விபத்துகள் ஏற்படுவதோடு விவசாய நிலங்கள், கிராமங்களுக்கு செல்வதிலும் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.எனவே பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளிலும் நான்கு வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.