சமூக விரோதிகளின் மதுக்கூடாரமாக மாறும் அரிக்கன்மேடு-சுற்றுலா பயணிகள் அச்சம்
- மாலை வேளையில் திறந்தவெளி மதுகூடாரமாக மாறியுள்ளது.
- பண்டைய கலாசாரத்தை அறிய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள்.
புதுச்சேரி:
கடல் வாணிபத்தில் தமிழர்கள் கொடிகட்டிப் பறந்ததற்கு சான்றாக புதுச்சேரி அரியாங்குப்பம் அருகே காக்கையன்தோப்பில் உள்ள அரிக்கன்மேடு பகுதி இருக்கிறது.
கடலில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கும் இங்கு கி.மு.வில் தொடங்கி கி.பி. வரை வாணிபம் நடந்ததற்கான ஆதாரங்கள் அகழாய்வு மூலம் கிடைத்துள்ளன. அதிலும் அங்கு ரோமானிய அரசன் அகஸ்டஸ் உருவம் பொறித்த நாணயங்கள், மணிகள், பொம்மைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அங்கு கிடைத்த சாயத்தொட்டி, உறைகிணறு, மதுச்சாடி, பிராமி எழுத்து அமைந்த பானை ஓடு, யவனக் குடியிருப்பின் சுவர் ஆகியவை பண்டைய காலத்திலேயே அரிக்கமேடு வாணிபத்தில் சிறந்து விளங்கியதை தெரிவிக்கிறது.
ஆனால், இங்கு அகழாய்வு நடத்த புதுச்சேரி அரசு பல முறை நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக அறிவித்தாலும் இதுவரை பணிகள் தொடங்கவில்லை.பொன்னியின் செல்வன் படத்தில் சில காட்சிகள் அரிக்கன்மேடு பகுதியில் படமாக்கப்பட்டது.
இதன்பிறகு அரிக்கன் மேடு பகுதி பிரபலமானது புதுச்சேரிக்கு சுற்றுலா வரும் பயணிகள் படகில் ஆற்றில் கடந்து வந்து இந்த பகுதியை பார்வையிடுகிறார்கள். ஆனால் இங்கு உள்ள வரலாற்று தகவல் எதுவும் சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் குறிப்பிடப்படவில்லை.
சுற்றுலா பயணிகளுக்கு தேவையான எந்த ஒரு வசதியும் இல்லை இதனால் அரிக்கன்மேட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பழமையான பண்டைய கலாசாரத்தை அறிய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள்.
எந்த ஒரு வரலாற்று தகவலையும் தெரிந்து கொள்ளாமல் பாழடைந்த பழமையான வெறும் சுண்ணாம்பு கட்டிடத்தை மட்டுமே பார்த்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தாலும் மற்ற நேரங்களிலும் மாலையிலும் இது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது.
இங்கு மாலை வேளையில் திறந்தவெளி மதுகூடாரமாக மாறியுள்ளது. இங்கு மதுபிரியர்கள் ஒன்றுகூடி இரவு வரை மது குடிக்கின்றனர் அவர்கள் விட்டுச் செல்லும் மதுபாட்டில் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளை இங்கு உள்ள 2 ஊழியர்கள் தினமும் எடுத்துப் போடுவது முக்கிய வேலையாக உள்ளது.
அரிக்கமேட்டின் பண்டைய வரலாற்று பொக்கிஷத்தை பாதுகாக்காததால் தற்போது சமூக விரோதிகளின் கூடாராமாக மாறியுள்ளது.