விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு சோதனைச்சாவடி- தங்கும் விடுதிகளில் போலீசார் தீவிர சோதனை
- 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பின் காரணமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்து.
- தங்கும் விடுதி, மேன்சன் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு போன்ற தங்கும் இடங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
கோவை:
நாடு முழுவதும் நாளை மறுநாள் (31-ந் தேதி) விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பின் காரணமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்து.
இதனால் பொது இடங்களில் விநாயகர் சிலை வழிபாடு, விநாயகர் சிலை ஊர்வலம் போன்றவை நடக்கவில்லை. ஆனால், இந்த ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் பொது இடங்களில் சிலை வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்ப டுத்தப்பட்டுள்ளன.
கோவையில் உள்ள தங்கும் விடுதி, மேன்சன் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு போன்ற தங்கும் இடங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சந்தேகப்படும் நபா்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் 24 மணி நேரமும் போலீசார் தீவிர வாகன தணிக்கை செய்து கண்காணித்து வருகின்றனர். தவிர, மாவட்டத்திற்குள் பல இடங்களில் வாகன சோதனையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுமக்கள் சந்தேகப்படும்படியாகவோ அல்லது குற்றசெயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து போலீசாருக்கு, மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708-100100ஆகியவற்றை தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.