கடலூர் பாதிரிக்குப்பத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் ஆட்கள் குறைப்பை கண்டித்து பெண்கள் சாலை மறியல்
- 100 நாள் வேலை திட்டத்தில் பெண்கள் வேலை செய்து வருகின்றனர்.
- 50-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
கடலூர்:
கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாதிரிக்குப்பம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் பெண்கள் வேலை செய்து வருகின்றனர். அங்கு வேலை செய்யும் பெண்களுக்கு சரியாக வேலை வழங்கப்படவில்லை. சம்பளம் சரியாக தரவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இந்தநிலையில் பாதிக்குப்பம் ஊராட்சியில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி புரியும் பெண்களை ஆட்குறைப்பு செய்யப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை கடலூர் - பாலூர் சாலையில் பாதிரிக்குப்பம் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில்,
ஏற்கனவே எங்களுக்கு வேலையும், சம்பளமும் சரியாக வழங்கப்படுவதில்லை. இந்த நிலையில் ஆட்குறைப்பு செய்யப் போவதாக தகவல் வந்துள்ளது. இதனால் எங்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். மேலும் வசதியானவர்களுக்கு வேலை கொடுத்துவிட்டு, ஏழை எளிய மக்களின் வேலையை பறிக்கிறார்கள்.இதனை கண்டித்து நாங்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளோம். எனவே எங்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆக்ரோஷமாக கூறினார்கள்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உத்தரவாதம் அளித்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக கடலூர் பாலூர் சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.