பட்டினப்பாக்கம் கடற்கரையில் 366 கடைகளுடன் மீன் மார்க்கெட் அமைக்கும் பணி தொடங்கியது
- புதிதாக அமைக்கப்படும் மீன் மார்க்கெட்டில் 1,240 சதுர மீட்டரில் மீன் கடைகளும், 164 சதுர மீட்டரில் மீன் கொட்டும் இடங்களும் அமைகிறது.
- சிங்கார சென்னை திட்டத்தின்கீழ் ரூ.8.5 கோடி செலவில் அமையும் இந்த சந்தையில் 50 சதவீத மராமத்து பணிகள் நிறைவடைந்து உள்ளன.
சென்னை:
சென்னை கலங்கரை விளக்கம்-பட்டினப்பாக்கத்தை இணைக்கும் சர்வீஸ் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் 2 ஏக்கர் பரப்பளவில் மீன் மார்க்கெட் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங்பேடி கூறியதாவது:-
புதிதாக அமைக்கப்படும் மீன் மார்க்கெட்டில் உள்ள 366 கடைகள் இழுவிசை தன்மை கொண்ட கூரையுடன் செயல்படும். 1,240 சதுர மீட்டரில் மீன் கடைகளும், 164 சதுர மீட்டரில் மீன் கொட்டும் இடங்களும் அமைகிறது.
இதனால் காற்றோட்டத்துடன் காணப்படும். இங்கு வாகன நிறுத்தும் வசதி மேம்படுத்தப்படும். ஒரே நேரத்தில் 155 மோட்டார் சைக்கிள்கள், 62 கார்களையும் நிறுத்த முடியும். பெண்களுக்காக 13 கழிப்பறைகளும், ஆண்களுக்காக 7 கழிப்பறைகளும் ஏற்படுத்தப்படுகின்றன.
படகுகள் வந்ததும் இந்த மீன் மார்க்கெட்டில் வியாபாரம் தொடங்கிவிடும். மேலும் இரவு நேரத்தில் வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் உயர் கோபுர மின்விளக்கு ஒன்றும் அமைக்கப்படும்.
மேலும் மழைநீர் கட்டமைப்புகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவையும் அமைக்கப்படும்.
சிங்கார சென்னை திட்டத்தின்கீழ் ரூ.8.5 கோடி செலவில் அமையும் இந்த சந்தையில் 50 சதவீத மராமத்து பணிகள் நிறைவடைந்து உள்ளன. மீதமுள்ள பணிகள் அடுத்த 2 மாதங்களுக்குள் முடிவடை யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் மாதம் நடுப்பகுதியில் புதிய சந்தை பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.