செய்திகள்

யோகாவை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்: மத்திய மந்திரிகளுக்கு பிரதமர் மோடி கடிதம்

Published On 2016-06-15 01:57 GMT   |   Update On 2016-06-15 01:57 GMT
21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படும் நிலையில், யோகாவை மக்கள் இயக்கமாக ஆக்க வேண்டும் என்று மத்திய மந்திரிகளுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதி உள்ளார்.
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளின்பேரில், ஜூன் 21-ந் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. சபை கடந்த ஆண்டு அறிவித்தது. கடந்த ஆண்டு, இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் அந்த நாளில் யோகா பயிற்சிகள் நடைபெற்றன.

இரண்டாவது ஆண்டாக, வருகிற 21-ந் தேதி யோகா தினம் கொண்டாடப்படுகிறது. சண்டிகாரில், தேசிய அளவிலான யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மற்ற இடங்களிலும் யோகா பயிற்சி நடைபெறுகிறது.

இந்நிலையில், அனைத்து மத்திய மந்திரிகளுக்கும் பிரதமர் மோடி ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

சர்வதேச யோகா தினம் என்பது வெறும் நிகழ்ச்சி அல்ல. அது நம் வாழ்வின் ஒருங்கிணைந்த அங்கமாக யோகாவை ஆக்குவதற்கான வழி. யோகாவை மக்களிடையேயும், பல்வேறு வயதினரிடையேயும் பிரபலப்படுத்தி, நமது உடல் நலம் மற்றும் மனநலத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறை. இந்த அடிப்படையில் உங்களது ஆதரவை நான் கோருகிறேன்.

கடந்த ஆண்டு யோகா பயிற்சி மூலம் கிடைத்த புத்துணர்வை அனைத்து தரப்பினரின், குறிப்பாக இளைஞர்களின் தீவிர பங்கெடுப்பு மூலம் இந்த ஆண்டு முன்னெடுத்து செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

யோகாவால் உடலுக்கும், மனதுக்கும் கிடைக்கும் பலன்களை எடுத்துச் சொல்லி, இதை ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக ஆக்க வேண்டும். சண்டிகாரில் நடக்கும் நிகழ்ச்சி மட்டுமின்றி, நாடு முழுவதும் மாநில, மாவட்ட, வட்டார, பஞ்சாயத்து அளவில் இதுபோன்ற பயிற்சிகள் நடத்துவதே மத்திய அரசின் நோக்கம். இதற்கு ஒத்துழைக்குமாறு மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

இதற்காக, உள்ளூரில் தயாரிக்கப்பட்ட யோகா பாய்களையும், ஆடைகளையும் பயன்படுத்துமாறும், உள்ளூரில் கிடைக்கும் மூலப்பொருட்களை கொண்டு, உள்ளூர் கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்குமாறும் அனைத்து மாநிலங்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

மேலும், யோகா பயிற்சிகளில் மாற்றுத்திறனாளிகளையும் ஈடுபடுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். ஆகவே, யோகாவை மக்கள் இயக்கமாக மாற்றி, இந்த மாபெரும் பாரம்பரிய கலை, நம் அனைவருக்கும் பயன்தர செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு மோடி கூறியுள்ளார்.

Similar News