செய்திகள்

பெண்கள் ஓட்டும் ஆட்டோக்களுக்கு ஆரஞ்சு நிற பெயிண்ட்: மராட்டிய மாநில அரசு முடிவு

Published On 2016-06-15 03:30 GMT   |   Update On 2016-06-15 03:30 GMT
பெண்கள் ஓட்டும் ஆட்டோக்களுக்கு ஆரஞ்சு நிற பெயிண்ட் அடித்து இயக்க மராட்டிய மாநில அரசு முடிவு செய்துள்ளது.
மும்பை :

பெண்கள் ஓட்டும் ஆட்டோக்களுக்கு ஆரஞ்சு நிற பெயிண்ட் அடித்து இயக்க மராட்டிய மாநில அரசு முடிவு செய்துள்ளது.

மராட்டிய மாநிலத்தில் பெண்களுக்கு ஆட்டோ உரிமம் (பெர்மிட்) வழங்கப்பட்டு வருகிறது. சமீபகாலமாக ஆட்டோ உரிமம் கேட்டு விண்ணப்பிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெண்கள் இயக்கும் ஆட்டோவில் பெண் பயணிகள் தனியாக சென்றாலும் பாதுகாப்பாக இருப்பதாக உணர்வார்கள்.

எனவே பெண்களால் ஓட்டப்படும் ஆட்டோவிற்கு வழக்கமாக இயக்கப்படும் ஆட்டோக்களை போல கருப்பு, மஞ்சள் பெயிண்ட் அடிக்காமல் வேறு நிறத்தில் பெயிண்ட் அடிக்க அரசு திட்டமிட்டது.

வித்தியாசமான நிறத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டு இருந்தால் அது பெண் டிரைவர் ஓட்டும் ஆட்டோ என பெண் பயணிகளால் எளிதில் அடையாளம் காணமுடியும். இதற்காக பல்வேறு வண்ணங்கள் பரிசீலிக்கப்பட்டன. இந்தநிலையில் பெண்கள் இயக்கும் ஆட்டோவிற்கு ஆரஞ்சு நிறத்தில் பெயிண்ட் அடிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

பெண்கள் தாங்கள் இயக்கும் ஆட்டோவிற்கு ஆரஞ்சு நிற பெயிண்ட் அடித்து கொள்ள அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக மாநில போக்குவரத்து ஆணையர் ஷியாம் வார்தானே கூறினார். அரசின் இந்த முடிவினால் பெண் டிரைவர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 

Similar News