செய்திகள்

பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தில் கனமழை: மின்னல் தாக்கி 99 பேர் சாவு - பிரதமர் மோடி இரங்கல்

Published On 2016-06-23 00:35 GMT   |   Update On 2016-06-23 00:35 GMT
பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் மின்னல் தாக்கி 99 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் செய்தி வெளியிட்டு உள்ளார்.
பாட்னா :

பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதில் மின்னல் தாக்கி 99 பேர் உயிரிழந்தனர்.

பீகார், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட கிழக்குப்பகுதி மாநிலங்களில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் அக்டோபர் வரை பருவமழை பெய்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் நேற்று முன்தினம் பருவமழை தொடங்கியது.

இதன் காரணமாக பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக பீகாரில் நேற்று முன்தினம் இரவு புயல் காற்றுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

இந்த மாநிலங்களில் கனமழையுடன் பலத்த இடி, மின்னலும் ஏற்பட்டது. பீகார் தலைநகர் பாட்னாவின் புறநகர் பகுதியில் மின்னல் தாக்கி நிலத்தில் 8 அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டது. 100 அடி தூரத்துக்கு உருவாகி உள்ள இந்த பள்ளத்தால் பொதுமக்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் இந்த மின்னல் தாக்கி பல்வேறு இடங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. பீகாரின் ரோத்தாஸ், நாளந்தா, பக்சார், கிழக்கு சம்பாரன், போஜ்பூர், சகர்சா உள்ளிட்ட மாவட்டங்களில் கணிசமான உயிரிழப்புகள் ஏற்பட்டன.

இங்கு கடந்த 2 நாட்களில் மின்னல் தாக்கி 57 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், 24 பேர் காயமடைந்திருப்பதாகவும் பீகார் பேரிடர் மேலாண்மை நிறுவனம் கூறியுள்ளது. இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்து உள்ளது. மேலும் இடி, மின்னலுடன் மழை பெய்யும்போது வயல்வெளிக்கு யாரும் செல்ல வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்த கனமழையின் போது உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கி 42 பேர் இறந்ததாக அந்த மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். இரு மாநிலங்களிலும் மின்னல் தாக்கி உயிரிழந்த 99 பேரில் பெரும்பாலானோர் வயல்வெளிகளில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டு இருப்பது வேதனை அளிப்பதாக பிரதமர் மோடி இரங்கல் செய்தி வெளியிட்டு உள்ளார். 

Similar News