செய்திகள்

மற்ற மாநிலங்களை விட பஞ்சாபில் போதைப் பிரச்சனை குறைவு தான்: முதல்வர் பிரகாஷ் சிங் பாதல்

Published On 2016-06-29 05:54 GMT   |   Update On 2016-06-29 05:54 GMT
மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பஞ்சாபில் போதைப்பொருள் பிரச்சனை குறைவு தான் என்று அம்மாநில முதல்-மந்திரி பிரகாஷ் சிங் பாதல் கூறியுள்ளார்.
அமிர்தசரஸ்:

பஞ்சாப் மாநிலத்தில் அகாலி தளம் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரகாஷ் சிங் பாதல் முதல்-மந்திரியாக உள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிக அளவில் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

சர்ச்சையை ஏற்படுத்திய உத்தாப் பஞ்சாப் என்ற திரைப்படம், பஞ்சாபில் நிலவி வரும் போதைப்பொருள் பிரச்சனையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது தான்.

மேலும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பாக பஞ்சாப் மாநிலத்தில் நிலவும் போதைப்பொருள் பிரச்சனைக்கு எதிராக காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பஞ்சாபில் போதைப்பொருள் பிரச்சனை குறைவு தான் என்று அம்மாநில முதல்-மந்திரி பிரகாஷ் சிங் பாதல் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அமிர்தசரஸில் நிகழ்ச்சி ஒன்றில் பாதல் பேசியதாவது:-

பஞ்சாப்பில் அதிக போதைப்பொருள் நடவடிக்கைகள் இருப்பதாக கூறி மாநிலத்தை எதிர்க்கட்சிகள் அவமானப்படுத்தி வருகின்றன. பஞ்சாப் மாநிலத்தை பற்றிய தவறான கண்ணோட்டத்தை அளிக்கிறார்கள். போதைப்பொருள் வியாபாரிகளை தமது அரசு வெகுவாக குறைத்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Similar News