செய்திகள்

ஓசூரில் இருந்து பெங்களூருவுக்கு 10–வது நாளாக பஸ் போக்குவரத்து பாதிப்பு

Published On 2016-09-16 20:48 GMT   |   Update On 2016-09-16 20:49 GMT
கர்நாடகாவில் பதற்றம் தணிந்த நிலையிலும் ஓசூரில் இருந்து பெங்களூருவுக்கு 10–வது நாளாக பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழர்கள் தொடர்ந்து சொந்த ஊருக்கு திரும்புகிறார்கள்.
ஓசூர்:

தமிழ்நாட்டிற்கு காவிரிநீர் வழங்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வந்தன. இதன் காரணமாக கடந்த 6–ந் தேதி முதல் 10–ந் தேதி வரை 5 நாட்கள் தொடர்ச்சியாக தமிழக அரசு பஸ்கள் பெங்களூருவுக்கு இயக்கப்படவில்லை. இந்த பஸ்கள் அனைத்தும் ஓசூருடன் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

கடந்த 11–ந் தேதி மட்டும் ஓசூரில் இருந்து பெங்களூருவுக்கு தமிழக அரசு பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில் அன்று இரவு முதல் மீண்டும் நிறுத்தப்பட்டன. அங்கு பதற்றம் தணிந்த நிலையிலும் நேற்று 10–வது நாளாக தமிழக அரசு பஸ்கள் பெங்களூருவுக்கு இயக்கப்படவில்லை. அதே போல கடந்த 12–ந் தேதி கர்நாடகாவில் வரலாறு காணாத அளவிற்கு வன்முறை சம்பவங்கள் அரங்கேறியது. இதனால் 12–ந் தேதி முதல் கர்நாடக அரசு பஸ்களும் ஓசூருக்கு இயக்கப்படவில்லை. நேற்று 5–வது நாளாக கர்நாடக அரசு பஸ்கள் ஓசூருக்கு இயக்கப்படவில்லை. இதனால் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.

கர்நாடகாவில் வன்முறை சம்பவங்கள் நடந்ததால் அங்கு வசிக்க கூடிய தமிழர்கள் பலரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு தொடர்ந்து திரும்பிய வண்ணம் உள்ளனர். அவர்கள் அங்குள்ள கர்நாடக அரசு பஸ்களில் ஓசூர் அருகே கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி வரை வருகிறார்கள். அங்கிருந்து தமிழக எல்லையான ஓசூர் ஜூஜூவாடி வரையில் நடந்து வந்து அங்கிருந்து பஸ்களில் ஏறி தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று வருகிறார்கள். கர்நாடகாவில் இருந்து வரும் தமிழர்களுக்கு தேவையான உணவுகள், தண்ணீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சமூக ஆர்வலர்கள் மற்றும ஓசூர் நகராட்சி சார்பில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழக அரசு பஸ்கள் மாநில எல்லையான ஓசூர் ஜூஜூவாடி வரையிலும், கர்நாடக அரசு பஸ்கள் அம்மாநில எல்லையான அத்திப்பள்ளி வரையிலும் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்றைய தினம் தமிழ்நாட்டில் முழு அடைப்பு போராட்டம் நடந்ததின் காரணமாக தமிழக–கர்நாடக மாநில எல்லையில், பெங்களூரு மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. சீமந்த் குமார் சிங் தலைமையில், பெங்களூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமீத்சிங் மற்றும் 300–க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் தமிழக எல்லையில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். இதைத் தவிர துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணிகளை கவனித்து வருகிறார்கள்.

Similar News