செய்திகள்

கான்பூர் ரெயில் விபத்து: தந்தையை காணாமல் தவிக்கும் மணமகள்

Published On 2016-11-20 09:14 GMT   |   Update On 2016-11-21 05:40 GMT
உத்தரபிரதேசம் மாநிலம், கான்பூர் அருகே இன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளான ரெயிலில் பயணம் செய்த மணமகள் தன்னுடன் வந்த தந்தையை காணாமல் பரிதவித்து வரும் தகவல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ:

உத்தரபிரதேசம் மாநிலம், கான்பூர் அருகே இன்று அதிகாலை இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரெயில் கவிழ்ந்து, விபத்துக்குள்ளானதில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.

இந்த ரெயில் தடம்புரண்டபோது பெட்டியில் இருந்தவர்கள் எங்கு மாட்டிக்கொண்டனர் என்பது தெரியாமல் இருந்தது. இதனால் உடன் பயணித்தவர்களை காண முடியாது உயிர்பிழைத்த பயணிகள் தவித்து வருகின்றனர்.

விபத்துக்குள் சிக்கிய ரெயிலில் அசாம்காரக் மாவட்டத்தை சேர்ந்த ரூபி குப்தாவும் (வயது 20) பயணித்து உள்ளார். ரூபிக்கு டிசம்பர் ஒன்றாம் தேதி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.

திருமணத்திற்காக தந்தை மற்றும் உடன் பிறந்தவர்கள் நால்வருடன் இந்த ரெயிலில் ரூபி சென்று உள்ளார். விபத்தில் சிக்கிய ரூபியின் கைகளில் காயம் ஏற்பட்டுள்ளது. அவருடைய சகோதர, சகோதரிகளும் காயம் அடைந்துள்ளனர்.

திருமணத்திற்கு வாங்கிசென்ற பொருட்களையும் இந்த விபத்தில் இழந்துவிட்ட ரூபி, தன்னுடைய தந்தை எங்கிருக்கிறார்? என்று பரிதவிப்புடன் தேடிவருகிறார்.

“என்னுடைய தந்தையை நான் இதுவரையில் கண்டுபிடிக்கவில்லை, நான் எல்லா பகுதியிலும் தேடிவிட்டேன். சிலர் மருத்துவமனைகளில் தேடும்படி கூறுகிறார்கள், என்ன செய்வது? என்று தெரியாமல் இருக்கிறேன்.

என்னுடைய திருமணம் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்பது கூட எனக்கு தெரியாது. என்னுடைய தந்தை எனக்கு வேண்டும், நான் எல்லாப் பகுதிக்கும் சென்று அழைத்தேன், ஆனால் அவரிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை, எனக்கு இப்போது என்ன செய்வது? என்று தெரியவில்லை என்று ரூபி கண்ணீருடன் கூறுகிறார்.

Similar News