செய்திகள்

பெண்கள் குறித்து தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கண்டனத்துக்குரியது: வெங்கையா நாயுடு பேச்சு

Published On 2017-01-25 16:55 GMT   |   Update On 2017-01-25 16:56 GMT
பெண்கள் குறித்து தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கண்டனத்துக்குரியது என்று மத்திய மந்திரி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் சமாஜ்வாடி, காங்கிரஸ் கூட்டணி அமைவதற்கு காரணமாக இருந்த சோனியா காந்தியின் மகள் பிரியங்கா தேர்தல் பிரசாரத்திலும் தீவிரமாக ஈடுபடுவார் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இதுபற்றி பா.ஜனதாவின் தலைவர்களில் ஒருவரான வினய் கத்தியாரிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர், ‘‘இது ஒரு பிரச்சினையே அல்ல. அவரைவிட (பிரியங்கா) அழகான பெண்களும் தேர்தல் பிரசாரத்தில் உள்ளனர். அவர்களில் சிலர் நடிகைகள், கலைஞர்கள் ஆவர். ஸ்மிரிதி இரானியும் அழகான பெண்தான். அவரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்’’ என்று குறிப்பிட்டார்.

இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ், ‘‘இந்திய பெண்களை அவமதித்த வினய் கத்தியார் மட்டுமின்றி இதற்காக மோடியும், அமித்ஷாவும் மன்னிப்பு கேட்கவேண்டும்’’ என்றும் கோரி இருக்கிறது.

இந்த கருத்துக்கு பாரதீய ஜனதா மூத்த தலைவரும் மத்திய மந்திரியுமான வெங்கையா நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார். வெங்கையா நாயுடு கூறுகையில், ‘‘தனிப்பட்ட முறையில் எவர் ஒருவரையும், குறிப்பாக பெண்களை தாக்கி கருத்து தெரிவிப்பதை யாரும் விரும்ப மாட்டார்கள். அதை பா.ஜனதா ஆதரிப்பதும் கிடையாது’’ என்றார்.

Similar News