செய்திகள்

கடப்பா அருகே செம்மரம் வெட்ட சென்றதாக திருவண்ணாமலை தொழிலாளர்கள் 11 பேர் கைது

Published On 2017-02-08 04:17 GMT   |   Update On 2017-02-08 04:17 GMT
கடப்பா அருகே செம்மரம் வெட்ட சென்றதாக தமிழக தொழிலாளர்கள் 11 பேரை ஆந்திர போலீசார் கைது செய்தனர்.
திருப்பதி:

ஆந்திர மாநிலம், கடப்பா அருகே நேற்று செம்மரக்கடத்தல் சிறப்பு பிரிவை சேர்ந்த 2 போலீசார் பணிமுடிந்து கடப்பா அருகே உள்ள யர்லகுண்டாவுக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கமலாபுரம் பஸ் நிலையத்தில் 11 பேர் பஸ்சில் ஏறினர்.

அடுத்த சிறிது நேரத்தில் அவர்கள் செம்மரம் வெட்டும் கூலித் தொழிலாளர்கள் என அறிந்த போலீசார், பஸ்சில் பயணம் செய்த அனைவரின் பைகளையும் சோதனையிட்டனர். அதில் மரம் வெட்டும் கருவிகளான கத்தி, கோடரி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தது.

இதையடுத்து பயணிகளின் உதவியுடன் அவர்களை யர்லகுண்டாவில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அவர்களிடமிருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் 11 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட 11 பேரும் ஐவ்வாது மலையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

Similar News