செய்திகள்

மாஞ்சா நூலுக்கு தடை: மாநில அரசுகளின் அறிக்கைகளை தாக்கல் செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

Published On 2017-03-16 20:32 GMT   |   Update On 2017-03-16 20:32 GMT
மாஞ்சா நூலுக்கு தடைவிதிக்கப்பட்டது தொடர்பாக மாநில அரசுகளின் அறிவிக்கைகள் மற்றும் ஐகோர்ட்டுகளின் உத்தரவுகளின் பட்டியலை தாக்கல் செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.
புதுடெல்லி:

பட்டம் விடுவதற்கு மாஞ்சா நூல் பயன்படுத்த தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மாஞ்சா நூல் பயன்படுத்துவதால் உயிரிழப்புகள் ஏற்படுவதால், மாஞ்சா நூல் விற்கவும், பயன்படுத்தவும் நாடு முழுவதும் தடை விதிக்க கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ‘பீட்டா’ அமைப்பு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு பசுமை தீர்ப்பாய தலைவர் சுவதந்தர் குமார் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தீர்ப்பாய தலைவர், ‘கண்ணாடி, நைலான் உள்ளிட்ட பொருட்களால் தயாரிக்கப்படும் மாஞ்சா நூல் மிகவும் ஆபத்தானது. மாஞ்சா நூலை பயன்படுத்த சில மாநில அரசுகள் தடை விதித்திருப்பதாக தெரிகிறது. மேலும், சில ஐகோர்ட்டுகளும் இதுதொடர்பாக சில உத்தரவுகளை பிறப்பித்து உள்ளன. எனவே, மாநில அரசுகளின் அறிவிக்கைகள் மற்றும் ஐகோர்ட்டுகளின் உத்தரவுகளின் பட்டியலை பீட்டா அமைப்பு 2 நாட்களில் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தார்.

இதனையடுத்து இந்த வழக்கு 20-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

Similar News