செய்திகள்

கர்நாடக முதல் மந்திரியை ஏற்றிச்சென்ற ஹெலிகாப்டர் பறவை மோதியதால் அவசர தரையிறக்கம்

Published On 2017-04-24 08:27 GMT   |   Update On 2017-04-24 08:27 GMT
கர்நாடக மாநில முதல் மந்திரியை ஏற்றிச்சென்ற ஹெலிகாப்டர் மீது இன்று பறவை மோதியதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பெங்களூரு:

கர்நாடக மாநில முதல் மந்திரியை ஏற்றிச்சென்ற ஹெலிகாப்டர் மீது இன்று பறவை மோதியதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

கர்நாடக மாநிலத்துக்குட்பட்ட ஹாசன் மாவட்டத்தில் உள்ள சரவணபெலோகலா பகுதியில் 12-வது நூற்றாண்டில் வாழ்ந்த ஜைன மதத்தை சேர்ந்த மகானாக கருதப்படும் கோமத்தீஷ்வரருக்கு 57 அடி உயரத்தில் பிரமாண்ட சிலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

‘பாகுபலி’ என்றும் அழைக்கப்படும் இவரது சிலையை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ‘மஹாமஸ்தாபிஷேகம்’ விழாவின்போது திறப்பதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெறுகிறது.

இந்தப் பணிகளை பார்வையிடவும், சரவணபெலோகலா பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை
துவக்கி வைப்பதற்காகவும் கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா இன்று பெங்களூரில் இருந்து ஹசான் மாவட்டத்துக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றார்.


மாநில உள்துறை மந்திரி பரமேஸ்வரா உள்பட மொத்தம் 5 பேரை சுமந்தபடி பெங்களூர் புறநகர் பகுதியில் உள்ள ஹெச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து அந்த ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்றது. தரையில் இருந்து உயரக் கிளம்பி வான்வழியாக சென்றபோது எதிரே வந்த ஒரு பெரிய பறவை ஹெலிகாப்டர் மீது வேகமாக மோதியது.

இதையடுத்து, உஷாரான விமானி ஹெலிகாப்டரின் பயணத்தை தொடராமல் அவசரமாக தரையிறக்கினார். விமான நிலையத்தில் பொறியாளர்கள் ஓடிவந்து அந்த ஹெலிகாப்டரை துல்லியமாக பரிசோதித்தனர். பறவை மோதியதால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்த பின்னர், சில நிமிடங்களுக்கு பின்னர் அந்த ஹெலிகாப்டர் திட்டமிட்டப்படி சரவணபெலோகலாவை நோக்கி புறப்பட்டு சென்றது.

Similar News