செய்திகள்

புளூவேல் விளையாட்டுக்கு தடை கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Published On 2017-09-15 11:58 GMT   |   Update On 2017-09-15 11:58 GMT
'நீலத்திமிங்கலம்' விளையாட்டுக்கு தடை கேட்டு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் வழக்கு குறித்து விரைவில் பதில் கூறுமாறு மத்திய அரசிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
புதுடெல்லி:

உலகம் முழுவதும் நீலத்திமிங்கலம் என்ற ஆன்லைன் விளையாட்டால் பல இளைஞர்கள் தற்கொலை செய்துள்ளனர். இளைஞர்களை மூளைச்சலவை செய்து தற்கொலைக்கு தூண்டும் இந்த விபரீத விளையாட்டு இந்தியாவிலும் வேகமாக பரவி வந்தது. கடந்த செப்டம்பர் 5-ம் தேதி வரை உலகம் முழுவதும் 200 பேர் இறந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து அந்த விபரீத விளையாட்டை தடை செய்யக்கோரி தமிழ்நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் என்.எஸ்.பொன்னையா (வயது 73) உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவை மூத்த நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கார் மற்றும் டி.ஓய்.சந்திரசூட் ஆகிய மூன்று பேர் கொண்ட அமர்வு விசாரணை செய்தது. மேலும் இந்த வழக்கில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலின் உதவியை உச்சநீதிமன்றம் நாடியுள்ளது.

விசாரணையின் முடிவில், மத்திய அரசு மூன்று வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டு, நோட்டீஸ் அனுப்பினர்.

சமூக ஊடகங்களில் இருந்து 'நீலத்திமிங்கலம்’ விளையாட்டு தொடர்பான இணைப்புகளை நீக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 22-ம் தேதி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News