செய்திகள்

ஐ.ஏ.எஸ் தேர்வில் காப்பியடிக்க உடந்தை: ஐ.பி.எஸ் அதிகாரியின் மனைவியும் கைது

Published On 2017-10-31 02:55 GMT   |   Update On 2017-10-31 02:55 GMT
சென்னையில் நேற்று நடந்த ஐ.ஏ.எஸ் பிரதான தேர்வில் காப்பியடித்த ஐ.பி.எஸ் அதிகாரி ஷபிர் கரிமின் மனைவி ஜாய்ஸ் ஜோய் ஐதராபாத்தில் கைது செய்யப்பட்டார்.
ஐதராபாத்:

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஷபிர் கரிம். ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் நெல்லை மாவட்டத்தில் உதவி (பயிற்சி) சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். இந்திய ஆட்சித்துறை பணியான ஐ.ஏ.எஸ். வேலையில் சேருவதற்கு ஆசைப்பட்ட ஷபிர் கரிம் நேற்று சென்னையில் நடைபெற்ற எழுத்து தேர்வில் கலந்து கொண்டார்.

தேர்வின்போது கேள்வித்தாளில் உள்ள பதில்களை ஐதராபாத்தில் இருந்து செல்போன் வழியாக அவரது மனைவி ஜாய்ஸ் ஜோய் ஒவ்வொன்றாக படித்து கூறினார். இதை காதில் மாட்டியிருந்த ‘புளூ டூத்’ வழியாக கேட்டபடி ஷபிர் கரிம் தேர்வை எழுதியுள்ளார்.

இதை கவனித்துவிட்ட தேர்வுத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக அவரை கைது செய்தனர். அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் ஐதராபாத் நகர் போலீசார் துணையுடன் அவரது மனைவியையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சென்னை போலீசார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இன்று காலை அவரது மனைவி ஜாய்ஸ் ஜோய் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News