செய்திகள்

ஒடிசா ஐகோர்ட் நீதிபதி வீட்டில் சோதனை: சுப்ரீம் கோர்ட்டில் வருத்தம் தெரிவித்தது சி.பி.ஐ.

Published On 2018-01-05 12:09 GMT   |   Update On 2018-01-05 12:09 GMT
ஒடிசா மாநில ஐகோர்ட் நீதிபதி வீட்டில் தவறுதலாக சோதனை நடத்தியதற்கு, சி.பி.ஐ. அதிகாரிகள் சுப்ரீம் கோர்ட்டில் இன்று வருத்தம் தெரிவித்தனர்.
புதுடெல்லி:
 
ஒடிசா மாநில ஐகோர்ட் முன்னாள் நீதிபதி இஷ்ரத் மஸ்ரூர் குத்தூசி. இவர்மீது சி.பி.ஐ. ஊழல் வழக்குப்பதிவு செய்திருந்தது. சுப்ரீம் கோர்ட்டால் தடை செய்யப்பட்ட தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுமதித்தது தொடர்பாக குத்தூசி உள்பட 5 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதற்கிடையே, சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போதைய ஐகோர்ட் நீதிபதி வீட்டில் சமீபத்தில் சோதனை நடத்தினர். இதுதொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக, நீதிபதி சிக்ரி தலைமையிலான அமர்வு சி.பி.ஐ. அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியது. அப்போது தான், நீதிபதி குத்தூசி வீட்டில் சோதனை நடத்துவதற்கு பதிலாக, தவறுதலாக தற்போதைய நீதிபதி வீட்டில் சோதனை நடத்தியது தெரியவந்தது.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் இன்று ஆஜரான சி.பி.ஐ. அதிகாரிகள், தங்களது தவறான நடவடிக்கைக்கு வருத்தம் தெரிவித்தனர். மேலும், அவர்கள் கூறுகையில், தாங்கள் தவறுதலாக நடத்திய சோதனைக்கு நீதிபதியிடமும் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர். #odisha, #judge #cbi #tamilnews
Tags:    

Similar News