செய்திகள்

பத்மாவத் படத்தை ராஜஸ்தானில் திரையிட கூடாது: முதல் மந்திரி உத்தரவு

Published On 2018-01-08 14:36 GMT   |   Update On 2018-01-08 14:36 GMT
பரபரப்பான சர்ச்சையில் சிக்கியுள்ள பத்மாவத் படத்தை ராஜஸ்தானில் திரையிட அனுமதிக்க கூடாது என அம்மாநில முதல் மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா உத்தரவிட்டுள்ளார். #padmavat #vasundhararaje
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தானின் சித்தூர் ராணி பத்மினியின் கதையை மையமாக வைத்து ‘பத்மாவதி’ என்ற பெயரில் படம் உருவாகி வந்தது. 

இதில் ராணி பத்மாவதியாக நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். இந்த படத்துக்கு ராஜபுத்திர வம்சத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக் கூடாது என்று ராஜஸ்தான் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியாவும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனால் கடந்த டிசம்பர் மாதம் வெளியாக இருந்த பத்மாவதி படத்துக்கு தணிக்கை குழு சான்றிதழ் அளிக்க மறுத்துவிட்டதால், படம் திரையிடப்படுவது நிறுத்தப்பட்டது. இதனால் ரூ.130 கோடி செலவில் தயாரான படம் முடங்கியது.

இந்த நிலையில் ஆட்சேபகரமான காட்சிகளை நீக்கிய பின்பு மீண்டும் டெல்லியில் உள்ள தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தணிக்கை குழுவினர் படத்தை பார்த்துவிட்டு சில திருத்தங்கள் செய்யுமாறு வலியுறுத்தினர். படத்தின் பெயரை மாற்றவும் சிபாரிசு செய்தனர்.

இதையடுத்து ராணி பத்மாவதியும், அலாவுதீன் கில்ஜியும் பாடும் கனவு பாடல் காட்சிகளில் மாற்றம் செய்யப்பட்டது. படத்தின் பெயர் ‘பத்மாவத்’ எனவும் மாற்றப்பட்டது. மொத்தத்தில் 26 காட்சிகளில் வெட்டு போடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ‘பத்மாவத்’ படத்துக்கு அனைவரும் பார்க்கும் வகையில் யு.ஏ. சான்றிதழ் வழங்கி திரையிட அனுமதி அளித்துள்ளது.

படம் ரிலீஸ் தேதி இன்னும் முடிவாகவில்லை. இந்த படத்துக்கு எழுந்த எதிர்ப்பு மற்றும் சர்ச்சை காட்சிகளால் உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் முன்பு திட்டமிடப்பட்டதை விட கூடுதலாக 60 நாடுகளில் படத்தை திரையிட தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்தியாவிலும் கூடுதல் நகரங்களில் ரிலீசாகிறது. இதற்கான பணிகள் நடைபெறுகிறது. இந்தப்பணி முடிந்ததும் ஜனவரி 25-ம் தேதி உலகம் முழுவதும் ஒரே நாளில் படத்தை திரையிட முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், மக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என அம்மாநில முதல் மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா இன்று உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக, மாநில உள்துறை மந்திரி குலாப் சந்த் கட்டாரியாவுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும்  அவர் தெரிவித்தார். #tamilnews #Padmavat #vasundhararaje
Tags:    

Similar News