செய்திகள்

ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார் எடியூரப்பா

Published On 2018-05-15 12:35 GMT   |   Update On 2018-05-15 12:35 GMT
கர்நாடக மாநிலத்தில் ஆட்சியமைக்க தங்களை அழைக்க வேண்டும் என்றும், மெஜாரிட்டியை நிரூபிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் ஆளுநரிடம் எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார். #KarnatakaElection2018
பெங்களூரு:

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் ஆட்சியமைக்க பெரும்பான்மை பெறுமா? என்பதில் இழுபறி நீடிக்கிறது. மாலை 5.30 மணி நிலவரப்படி பா.ஜ.க. 88 தொகுதிகளிலும், காங்கிரஸ் 66 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர்கள் 34 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

இதற்கிடையே பா.ஜ.க ஆட்சிக்கு வருவதை தடுக்க வியூகம் அமைத்த காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு ஆதரவு அளித்தது. காங்கிரசின் ஆதரவை ஏற்றுக்கொண்ட குமாரசாமி கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க தனக்கு அழைப்பு விடுக்குமாறு கேட்டு கொள்வதற்காக கவர்னரை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதேசமயம், அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பா.ஜ.க.வும் ஆட்சியமைக்க தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக பா.ஜ.க.வின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா இன்று மாலை ஆளுநர் வாஜுபாய் வாலாவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அப்போது, அவர் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அவகாசம் அளித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பா, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநரிடம் அனுமதி கோரியதாக தெரிவித்தார்.

“நாங்கள் தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆளுநரை சந்தித்தோம். சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 7 நாட்கள் அவகாசம் வழங்கும்படி ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தோம்” என்றார். #KarnatakaElection2018 #KarnatakaVerdict #Yeddyurappa
Tags:    

Similar News