செய்திகள்
அமெரிக்க தயாரிப்பு பொருட்களில் சிலவற்றின் மீதான சுங்க வரியை அதிகரித்தது இந்தியா
இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் சில அமெரிக்க தயாரிப்புகளின் மீதான சுங்கவரியை உயர்த்தி மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. #India #US #ImportDutyHikes
புதுடெல்லி:
மார்ச் மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல், அலுமினியம் பொருட்களுக்கு அதிகப்படியான இறக்குமதிக்கான சுங்கவரியை விதித்திருந்தார். இது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
அமெரிக்காவின் இந்த வரி விதிப்புக்கு கண்டனம் தெரிவித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஏனெனில் இந்தியாவில் இருந்து வருடத்துக்கு சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு ஸ்டீல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் சில தயாரிப்புகளுக்கு இறக்குமதி வரியை அதிகரித்து நிதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, சுண்டல், கொண்டை கடலை போன்ற பொருட்களின் இறக்குமதி வரி 60 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. பயறு வகைகளுக்கான இறக்குமதி வரியானது 30 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆர்த்தீமியா எனப்படும் ஒருவகை இறால்மீன் மீதான இறக்குமதி வரி 15 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல், அலாய் ஸ்டீல், ஸ்டெய்ன்லஸ் ஸ்டீல், பருப்பு வகைகள், இரும்பு, ஆப்பிள், முத்துக்கள் போன்ற இதர பொருட்கள் மீதான இறக்குமதி வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இருசக்கரவாகனங்கள் மீதான இறக்குமதி வரி மீது எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை. #India #US #ImportDutyHikes