செய்திகள்

சிபிஐ இயக்குனர் நீக்கம்- சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் வழக்கு

Published On 2018-11-03 09:21 GMT   |   Update On 2018-11-03 09:21 GMT
சிபிஐ இயக்குனர் நீக்கம் செய்யப்பட்டதால் அவரை பணியில் அமர்த்த கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. #congress #cbidirector #supremecourt

புதுடெல்லி:

சி.பி.ஐ. இயக்குனராக இருந்த அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அவர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சுமத்தினார்கள். இதையடுத்து கடந்த மாதம் 24-ந்தேதி அவர்கள் இருவரையும் மத்திய அரசு அதிரடியாக பதவி நீக்கம் செய்தது.

சி.பி.ஐ. புதிய இயக்குனராக நாகேஸ்வரராவ் நியமனம் செய்யப்பட்டார்.

சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்தார். ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடுகள் பற்றி சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா விசாரணை நடத்த தகவல்களை சேகரித்ததால் தான் அவர் பதவி பறிக்கப்பட்டதாக ராகுல் தெரிவித்தார்.

இந்த நிலையில் சி.பி.ஐ. இயக்குனர் பதவி நீக்கம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டை காங்கிரஸ் நாடி உள்ளது. காங்கிரஸ் பாராளுமன்ற தலைவர் மல்லிகார்ஜுனகார்கே இன்று சுப்ரீம்கோர்ட்டில் இது தொடர்பாக மனு செய்துள்ளார்.


சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா பதவி நீக்கம் செய்யப்பட்டது சட்ட விரோதமாகும். இந்த முடிவு தவறான முறையில் எடுக்கப்பட்டுள்ளது. மத்திய ஊழல் ஒழிப்பு கண்காணிப்பு துறை தவறாக செயல்பட்டு உள்ளது.

எனவே சி.பி.ஐ. இயக்குனர் பதவி நீக்கம் ரத்து செய்ய வேண்டும். அவரை மீண்டும் பணியில் அமர்த்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது. #congress #cbidirector #supremecourt

Tags:    

Similar News