செய்திகள்

வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதியில் 44 மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்ய ஏற்பாடு

Published On 2018-11-30 10:40 GMT   |   Update On 2018-11-30 10:40 GMT
வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதியில் பக்தர்களுக்கு ஏழுமலையானின் தரிசனம் தங்குடையின்றி 44 மணி நேரத்துக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. #TirupatiTemple
திருமலை:

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் மிக விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. அன்று மட்டும் பக்தர்கள் வைகுண்ட வாயில் வழியாக தரிசனத்துக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அதனால் வைகுண்ட ஏகாதசியின் போது பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க ஏராளமான அளவில் திரள்வது வழக்கம்.

அதற்கான முன்னேற்பாடுகள் குறித்த தேவஸ்தானத்தின் அனைத்துத்துறை அதிகாரிகளின் கலந்துரையாடல் கூட்டம் திருமலையில் நேற்று நடந்தது.

அதை தொடர்ந்து தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாச ராஜு நிருபர்களிடம் கூறியதாவது:-

வரும் டிசம்பர் 18-ல் வைகுண்ட ஏகாதசி உற்சவமும், 19-ல் துவாதசி உற்சவமும் நடைபெற உள்ளன. இவற்றில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு திரண்டு வருவர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு ஏழுமலையான் தரிசனத்தை வழங்க தேவஸ்தானம் சில ஏற்பாடுகளை செய்துள்ளது. டிசம்பர் 17-ந் தேதி ஏழுமலையானை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் 16-ந் தேதி இரவு முதல் வைகுண்டம் பகுதி 1-ல் உள்ள காத்திருப்பு அறைகளில் அனுமதிக்கப்படுவர். 18-ந் தேதி தரிசனம் செய்ய உள்ள பக்தர்கள் 17-ந் தேதி காலை 10 மணி முதல் வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் காத்திருக்க அனுமதிக்கப்படுவர்.

காத்திருப்பு அறைகள் நிறைந்தவுடன் அவர்கள் நாராயணகிரி தோட்டத்தில் உள்ள வரிசைகள், திருமலை மாடவீதியில் உள்ள பார்வையாளர் அரங்குகள், பாபவிநாசம் செல்லும் வழியில் உள்ள கல்யாண மண்டபம், வெளிவட்டச் சாலையில் உள்ள தரிசன வரிசைகள் ஆகியவற்றின் வழியாக தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட உள்ளனர்.

அவர்களுக்கு 24 மணி நேரமும், உணவு, பால், தேநீர் உள்ளிட்டவை வழங்கப்படும். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

டிசம்பர் 18-ந் தேதி காலை 5 மணியளவில் வைகுண்டம்-2 காத்திருப்பு அறை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். இவ்வாறு காத்திருக்கும் பக்தர்களுக்கு டிசம்பர் 19-ந் தேதி நள்ளிரவு வரை ஏழுமலையானின் தரிசனம் தங்குடையின்றி 44 மணி நேரத்துக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இடையில் ஏழுமலையான் நைவேத்தியத்துக்காக மட்டும் 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை தரிசனம் நிறுத்தப்படும். தரிசனம் முடித்த பக்தர்கள் வைகுண்ட வாயில் வழியாக செல்ல அனுமதிக்கப்படுவர். நீண்ட காத்திருப்பு என்பதால் பக்தர்கள் அமைதியுடன் இருந்து தேவஸ்தானத்துக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார்.

டிசம்பர் 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை பரிந்துரைக் கடிதங்களுக்கு வழங்கப்படும் அறைகள், நன்கொடையாளர்களுக்கு வழங்கும் அறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் டிசம்பர் 18, 19-ந் தேதிகளில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம், ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. டிசம்பர் 18-ந்தேதி வி.ஐ.பி.க்கள் நேரடியாக வந்தால் ஒருவருக்கு 6 டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும். மத்திய அரசு அதிகாரிகளுக்கு 4 டிக்கெட்டுகள் வழங்கப்படும்.

டிக்கெட் பெற்ற 5 ஆயிரம் பக்தர்கள் 18-ந் தேதி ரூ.300 விரைவு தரிசனத்தில் அனுமதிக்கப்படுவர். 19-ந் தேதி தர்ம தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

டிசம்பர் 17-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கைக்குழந்தைகளின் பெற்றோர், நடைபாதை தரிசனம் உள்ளிட்ட அனைத்து முதன்மை தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. டிசம்பம் 18, 19-ந் தேதிகளில் மலைப்பாதைகள் 24 மணி நேரமும் திறந்திருக்கும்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் 18-ந் தேதி அதிகாலை 1 மணிக்கு வைகுண்டவாசல் திறக்கப்பட உள்ளது. 1.30 மணி முதல் வி.ஐ.பி.க்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். வைகுண்ட ஏகாதசி அன்று காலை தங்க ரதத்தின் புறப்பாடும், துவாதசி அன்று காலை தீர்த்தவாரியும் நடைபெற உள்ளன. இந்த 2 நாட்களிலும்1.75 லட்சம் பக்தர்களுக்கு தரிசனம் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

வைகுண்ட ஏகாதாசியின் போது பக்தர்கள் அதிக அளவில் திரள்வார்கள் என்பதால், 7 லட்சம் லட்டுகளை தயார் நிலையில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். #TirupatiTemple
Tags:    

Similar News