செய்திகள்

டிக்-டாக் செயலி பதிவின் போது விபரீதம் - டெல்லியில் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் வாலிபர் பலி

Published On 2019-04-15 01:02 GMT   |   Update On 2019-04-15 01:02 GMT
டிக்-டாக் செயலிக்கான வீடியோ பதிவின்போது துப்பாக்கி வெடித்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #Delhi #FilmingVideo
புதுடெல்லி:

டெல்லியின் ஜப்ராபாத் பகுதியை சேர்ந்த சல்மான் (வயது 19) என்ற கல்லூரி மாணவர், தனது நண்பர்களான அமிர், சொகைல் ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு காரில் இந்தியா கேட் பகுதிக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பும் வழியில் அவர்கள் துப்பாக்கியை உடலில் குறிவைப்பது போன்று டிக்-டாக் வீடியோ ஒன்றை பதிவு செய்ய முடிவு செய்தனர்.

இதற்காக காரின் டிரைவர் இருக்கையில் இருந்த சல்மானின் கன்னத்தில், நாட்டுத்துப்பாக்கி ஒன்றின் முனையை வைத்தவாறு சொகைல் போஸ் கொடுத்தார். அப்போது திடீரென அந்த துப்பாக்கி வெடித்தது. இதில் குண்டுபாய்ந்ததால் படுகாயமடைந்த சல்மான், காரிலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

இதனால் பதறிப்போன நண்பர்கள், உடனே அவரை தங்கள் உறவினர் ஒருவருடன் சேர்ந்து மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சல்மான் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சல்மானின் நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், சல்மானின் 2 நண்பர்கள் மற்றும் அவர்களின் உறவினரை போலீசார் கைது செய்தனர். டிக்-டாக் செயலிக்கான வீடியோ பதிவின்போது துப்பாக்கி வெடித்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News