செய்திகள்
சினிமா தியேட்டர்

கர்நாடகத்தில் வரும் 7-ம் தேதி வரை தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி

Published On 2021-04-03 23:44 GMT   |   Update On 2021-04-03 23:44 GMT
கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.
பெங்களூரு:

அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க கர்நாடக அரசு பல்வேறு விதிமுறைகளை அமல்படுத்தியது. அதன்படி, கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டு இருந்தது. இதற்கு கன்னட திரையுலகினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

குறிப்பாக, நடிகர் புனித் ராஜ்குமார் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அரசு உத்தரவை திரும்பப்பெற வலியுறுத்தினார். ஏனெனில் அவர் நடித்து வெளியாகி உள்ள யுவரத்னா படத்தி்ற்கு பெரும் நஷ்டம் ஏற்படும் நிலை உருவானது.

இதற்கிடையே, பெங்களூருவில் உள்ள காவேரி இல்லத்தில் நேற்று மாலை முதல் மந்திரி எடியூரப்பாவை நடிகர் புனித் ராஜ்குமார் மற்றும் கன்னட திரையுலகினர் சந்தித்து பேசினார்கள். அப்போது கொரோனா பரவலை காரணம் காட்டி தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்திருப்பதால், பெரிய அளவில் இழப்பு ஏற்படும் என்றும், அதனால் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அதுபற்றி பரிசீலித்து முடிவு எடுப்பதாக முதல் மந்திரி எடியூரப்பா அறிவித்திருந்தார்.

இந்நிலையில், கன்னட திரையுலகினரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ள கர்நாடக அரசு, தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்து நேற்று இரவு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு வரும் 7-ம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது. 8-ம் தேதியில் இருந்து தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த அனுமதி அளிக்கப்படும் என்றும் கர்நாடக அரசு அறிவித்துள்ளது. 
Tags:    

Similar News