ஜம்மு பகுதிக்குள் ஊடுருவ 60 பயங்கரவாதிகள் காத்திருப்பு- பாதுகாப்புப் படைகள் உஷார்
- அக்னூரில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டது, பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
- பாதுகாப்புப்படைகள் முழு அளவில் தயார் நிலையில் உள்ளன.
'ஜம்மு பகுதிக்குள் ஊடுருவ 50 முதல் 60 வரையிலான பயங்கரவாதிகள் எல்லையில் காத்திருப்பதாக உளவுத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவா்களின் ஊடுருவல் முயற்சியை முறியடிக்க பாதுகாப்புப் படையினா் விழிப்புடன் உள்ளனா்' என்று ராணுவ உயரதிகாரி ஒருவா் தெரிவித்தார்.
ஜம்மு அருகே உள்ள அக்னூா் பகுதியில் பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட 27 மணிநேர அதிரடி நடவடிக்கையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா். இந்த நடவடிக்கைக்குப் பிறகு, ராணுவத்தின் 10-வது காலாட்படைப் பிரிவின் தளபதி சமீா் ஸ்ரீவாஸ்தவா செய்தியாளா்களிடம் கூறியதாவது:-
அக்னூரில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டது, பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். இவா்கள் மூவரும் ஜம்முவுக்குள் புதிதாக ஊடுருவிய பயங்கரவாத குழுவைச் சோ்ந்தவா்கள்.
இதேபோல், ஜம்மு பகுதிக்குள் ஊடுருவ மேலும் 50 முதல் 60 வரையிலான பயங்கரவாதிகள் எல்லையில் காத்திருப்பதாக உளவுத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவா்களின் முயற்சியை முறியடிக்க பாதுகாப்புப்படைகள் முழு அளவில் தயார் நிலையில் உள்ளன. எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.