சிஏஏ விவகாரத்தில் வாக்கு வங்கி அரசியலுக்காக எதிர்க்கட்சிகள்தான் பொய் சொல்கின்றன- அமித் ஷா குற்றச்சாட்டு
- குடியுரிமை திருத்த சட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை.
- யாருக்கும் கதவுகள் மூடப்படவில்லை. குடியுரிமை கோரி விண்ணப்பிப்பதற்கு எந்த விதமான கால நிர்ணயமும் இல்லை.
இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்த நிலையில், வாக்கு வங்கிக்காக தேர்தல் தேதி அறிவிப்பதற்கு ஒரு சில நாட்களுக்கு முன் அமல்படுத்தப்பட்டுள்ளது என பா.ஜனதா மீது எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சட்டை வைத்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காள மாநில அரசுகள் சிஏஏ-வை செயல்படுத்தமாட்டோம் எனத் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் அமித் ஷா இன்று ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வாக்கு வங்கி அரசியலுக்காக குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கட்சிகள் பயன்படுத்துகின்றன. ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், பினராயி விஜயன் வாக்கு வங்கி அரசியலுக்காக பொய் சொல்கிறார்கள்.
குடியுரிமை திருத்த சட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை. அகண்ட பாரத்தில் ஒரு அங்கமாக இருந்தவர்கள் மத துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டவர்களுக்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுக்க வேண்டியது நமது தார்மீக, அரசியல் சாசன கடமை.
இஸ்லாமியர்களுக்கும் கூட குடியுரிமை கோரி விண்ணப்பிப்பதற்கான உரிமை உள்ளது. யாருக்கும் கதவுகள் மூடப்படவில்லை. குடியுரிமை கோரி விண்ணப்பிப்பதற்கு எந்த விதமான கால நிர்ணயமும் இல்லை. போதிய அவகாசம் எடுத்துக் கொள்ளலாம்.
சிஏஏ யாருடைய குடியுரிமையையும் பறிக்காது. மக்களவை தேர்தலுக்கு முன் சிஏஏ சட்டம் அமலுக்கு வரும் என கடந்த 4 வருடங்களாக 41 முறை நான் கூறியுள்ளேன்.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.