வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம்: மார்ச் 24, 25-ந்தேதிகளில் நடக்கிறது
- வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய மன்றத்தில் 9 சங்கங்கள் உறுப்பினர்களாக உள்ளன.
- இந்த மாதம் 24 மற்றும் 25-ந்தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு முடிவு செய்திருந்தது.
புதுடெல்லி:
வங்கித்துறையில் அனைத்து நிலைகளிலும் போதுமான பணியாளர்களை நியமித்தல், வாரத்துக்கு 5 நாட்கள் வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வங்கி ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
குறிப்பாக, செயல்பாடு ஆய்வு மற்றும் செயல்பாடு சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தை திரும்பப்பெற ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.
நிதிச்சேவை துறையின் இந்த நடவடிக்கை பணிப்பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி இருப்பதுடன், ஊழியர்களுக்கு இடையே பிரிவினையும் ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளன. இதைப்போல இந்திய வங்கிகள் சங்கத்தில் நிலுவையில் உள்ள எஞ்சிய பிரச்சனைகளைத் தீர்க்கவும், அரசு ஊழியர்களுக்கான திட்டத்தின்படி, வருமான வரியிலிருந்து விலக்கு அளிப்பதோடு, பணிக்கொடையை ரூ.25 லட்சமாக உயர்த்தவும் வங்கி ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் (மார்ச்) 24 மற்றும் 25-ந்தேதிகளில் நாடு தழுவிய அளவில் 2 நாள் வேலை நிறுத்தம் செய்ய வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய மன்றம் முடிவு செய்துள்ளது.
தங்கள் கோரிக்கை தொடர்பான பேச்சுவார்த்தை மற்றும் விவாதங்களுக்குப்பின் இந்த வேலை நிறுத்த முடிவை எடுத்துள்ளதாக அந்த மன்றம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய மன்றத்தில் 9 சங்கங்கள் உறுப்பினர்களாக உள்ளன. அந்தவகையில் அனைத்து இந்திய வங்கி ஊழியர் சங்கம், அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு, வங்கி ஊழியர்களின் தேசிய கூட்டமைப்பு, அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு உள்ளிட்ட முக்கிய சங்கங்கள் இதில் இடம்பெற்று உள்ளன.
முன்னதாக இந்த மாதம் 24 மற்றும் 25-ந்தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு முடிவு செய்திருந்தது. எனினும் வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய மன்றத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த தேதியை மாற்றி அமைத்ததாக அதன் பொதுச்செயலாளர் ரூபம் ராய் கூறியுள்ளார்.