இந்தியாவை பொருளாதார, சமூக ரீதியாக பாஜக பலவீனப்படுத்தியுள்ளது - அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு
- கும்பமேளாவில் எவ்வளவு பேர் இறந்தார்கள் என்று கேட்டால் 30 பேர் என்று சொல்கிறார்.
- கும்பமேளாவில் படகோட்டிக்கு எவ்வளவு வியாபாரம் ஆனது என்று கேட்டால் 30 கோடி என்கிறார்.
ஆளும் பாஜக அரசு இந்திய நாட்டை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பலவீனப்படுத்துவதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டினார்.
லக்னோவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அகிலேஷ் யாதவ், "சமூகத்தில் வெறுப்பு பரவுவதால் நாடு பலவீனமடைந்துள்ளது. பாஜக சமூகத்தை பலவீனப்படுத்தி பிளவை உருவாக்குகிறது. பாஜக நாட்டை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பலவீனப்படுத்தியுள்ளது.
நமது முதல்வர் 30 என்ற எண்ணை நேசிப்பதால் இதைச் சொல்கிறேன். (கும்பமேளாவில்) எவ்வளவு பேர் இறந்தார்கள் என்று கேட்டால் 30 பேர் என்று சொல்கிறார். (கும்பமேளாவில் படகோட்டிக்கு) எவ்வளவு வியாபாரம் ஆனது என்று கேட்டால் 30 கோடி என்கிறார். இந்த வகையான கணக்கை எங்கள் முதல்வரைத் தவிர வேறு யாராலும் கொடுக்க முடியாது" என்று தெரிவித்தார்.
கும்பமேளாவின் போது லட்சக்கணக்கான பக்தர்களை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்று இளைஞர்கள் பணம் சம்பாதித்தது தொடர்பாக பேசிய அகிலேஷ் யாதவ், "அலகாபாத்தில் அரசு வேலைகளுக்குத் தயாராகும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளதாக முதல்வர் கூறுகிறார். தனியார் வாகனங்களை வணிக வாகனங்களாகப் பயன்படுத்தலாம் என்று அரசாங்கம் எப்போது முடிவு செய்தது என்று யாராவது எனக்கு விளக்கவும்?
144 ஆண்டுகளுக்குப் பிறகு இளைஞர்களுக்கு இப்போது வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதா?" என்று மகா கும்பமேளா 144 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது என்ற உ.பி. அரசின் கூற்றை கேலி செய்தார்.
மேலும் பேசிய அவர், "இப்போது அவர்கள் முஸ்லிம் சமூகத்தின் மீது வெறுப்பைப் பரப்புகிறார்கள் என்பதை நான் அனைத்து மக்களுக்கும் சொல்ல விரும்புகிறேன். இனிமேல் எதிர்காலத்தில், பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்துகள், சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பை பரப்புவார்கள். 2027 இல் சமாஜ்வாதி கட்சி உத்தரபிரதேசத்தில் ஆட்சிக்கு வரும்"