இந்தியா

கடந்த 2023-2024 ம் ஆண்டு தேர்தலுக்கு ரூ.1755 கோடி செலவு செய்த பா.ஜ.க.

Published On 2025-02-26 15:05 IST   |   Update On 2025-02-26 15:05:00 IST
  • பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தேர்தலுக்காக ரூ.619.67 கோடியை செலவிட்டுள்ளது.
  • 6 தேசிய கட்சிகள் நன்கொடை மூலமாக மட்டும் ரூ.2669.86 கோடியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதுடெல்லி:

ஒவ்வொரு தேர்தலின் போதும் தேர்தல் ஆணையம் ஒவ்வொரு கட்சியும் இவ்வளவுதான் செலவு செய்ய வேண்டும் என உச்ச வரம்பு விதிக்கும்.

தேர்தல் முடிந்ததும் மாநில மற்றும் தேசிய கட்சிகள் தாங்கள் செலவிட்ட தொகையை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யும்.

இந்த நிலையில் தேர்தல் மற்றும் நிர்வாக செலவினகளுக்காக தேசிய கட்சிகள் எவ்வளவு தொகை செலவிட்டுள்ளது என கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையை வைத்து ஜனநாயக சீர்திருத்த அமைப்பு தேசிய கட்சிகளின் தேர்தலுக்காக எவ்வளவு பணத்தை செலவு செய்திருக்கிறது என அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க. கடந்த 2023-2024ம் ஆண்டு மட்டும் தேர்தல் செலவுக்காக ரூ.1755 கோடி செலவிட்டுள்ளது.

பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தேர்தலுக்காக ரூ.619.67 கோடியை செலவிட்டுள்ளது. இதில் தங்கள் நிர்வாக செலவுகளுக்கு மட்டும் பா.ஜ.க. 349.71 கோடியும், காங்கிரஸ் ரூ.340.7 கோடியும் செலவு செய்துள்ளது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்ச்சிஸ்டு) தேர்தல் மற்றும் இதர செலவுகளுக்காக மொத்தம் ரூ.56.29 கோடி செலவிட்டுள்ளது.

பா.ஜ.க., காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 6 தேசிய கட்சிகள் நன்கொடை மூலமாக மட்டும் ரூ.2669.86 கோடியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய 3 கட்சிகளும் தங்களின் மொத்த வருவாயில் 43.36 சதவீத தொகையை (ரூ.2,524.13 கோடி) நன்கொடைகள் மற்றும் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளன. இதில் பா.ஜ.க. ரூ.1,685.62 கோடியும், காங்கிரஸ் ரூ.828.36 கோடியும், ஆம் ஆத்மி ரூ.10.15 கோடியும் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளன.

கட்சிகள் தங்கள் செலவின கணக்குகளை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு கடந்த அக்டோபர் 31-ந் தேதி அன்று முடிவடைந்தது. குறிப்பிட்ட தேதிக்குள் பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி கட்சிகள் மட்டுமே தங்கள் கணக்கை தாக்கல் செய்திருந்தன.

பா.ஜ.க., காங்கிரஸ், மற்றும் இந்திய கம்யூனிஸ்டு (மார்ச்சிஸ்டு) ஆகிய கட்சிகள் காலக்கெடு முடிந்து 12,53 மற்றும் 64 நாட்களுக்கு பிறகே தங்கள் கணக்குகளை சமர்ப்பித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News