பாராளுமன்றத்திற்கு செல்லும் அரவிந்த் கெஜ்ரிவால்?- பரபரப்பை ஏற்படுத்திய ஆம் ஆத்மியின் நடவடிக்கை
- டெல்லி சட்டமன்ற தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியடைந்தார்.
- பஞ்சாப் மாநில முதல்வராக வாய்ப்புள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மாநில சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்தார். இதனால் சட்டமன்றத்திற்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பஞ்சாப் மாநில முதல்வராக பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
ஆனால், இது வழக்கமான கூட்டம். அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் மாநில முதல்வராக பதவி ஏற்கும் திட்டம் ஏதும் இல்லை என ஆம் அத்மி கட்சி விளக்கம் அளித்தது. இதனால் அந்த பரபரப்பு அடங்கியது.
இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் புதிய நகர்வு, தற்போது கெஜ்ரிவால் பாராளுமன்ற மாநிலங்களை எம்.பி. ஆகிறாரா? என்ற பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞசாப் மாநிலம் லூதியானா மேற்கு தொகுதி ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.-வாக இருந்த குர்ப்ரீத் கோகி கடந்த மாதம் காலமானார். இதனால் அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில்தான் லூதியானா மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக இருக்கும் சஞ்சீவ் அரோராவை வேட்பாளராக நிறுத்தியுள்ளது ஆம் ஆத்மி.
இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்வார். அவருக்கு பதிலாக கெஜ்ரிவாலை மாநிலங்களவை எம்.பி.யாக்க ஆம் ஆத்மி திட்டமிட்டுள்ளதாக செய்திகள் பரவின.
இந்த நிலையில் "அரவிந்த் கெஜ்ரிவால் மாநிலங்களவைக்கு செல்லப்போவதில்லை. முன்னதாக கெஜ்ரிவால் பஞ்சாப் மாநில முதல்வராக இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு செய்திகளும் முற்றிலும் தவறானவை.
அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர். அவருடைய தேவை மிக அதிகமாக உள்ளது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அவர் எந்த ஒரு இடத்திற்கும் மட்டுப்படுத்தப்படவில்லை" என ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் பிரியங்கா கக்கார் தெரிவித்துள்ளார்.