அமைச்சரவையை விரிவாக்கம் செய்த நிதிஷ் குமார்: பாஜக-வை சேர்ந்த 7 புதுமுகங்களுக்கு வாய்ப்பு
- பாஜக-வை சேர்ந்த 7 புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
- தற்போது அமைச்சரவையில் 38 பேர் இடம் பிடித்துள்ளனர்.
பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு நடைபெற்று வருகிறது. ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் பாஜக ஆதரவுடன் ஆட்சி செய்து வருகிறார். ஐக்கிய ஜனதா தளம், பாஜக ஆகியவை கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலில் போட்டியிட்டு அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
இந்த வருடம் இறுதியில் பீகார் மாநிலத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலிலும் ஐக்கிய ஜனதா தளம் பாஜக உடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை கருத்தில் கொண்டு 2024-2025 மத்திய பட்ஜெட்டில் பீகார் மாநிலத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில் பாஜக-வை சேர்ந்த பலருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கும் வகையில் நிதிஷ் குமார் தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்துள்ளார். தற்போது பாஜக-வைச் சேர்ந்த 7 புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பீகார் அமைச்சரவையில் 38 பேர் இடம் பிடித்துள்ளனர்.
புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆரிஃப் முகமது கான் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இன்று ஜிபேஷ் குமார், சஞ்சய் சரயோகி, சுனில் குமார், ராஜூ குமார் சிங், மோதி லால் பிரசாத், விஜய் குமார் மண்டல், கிருஷ்ண குமார் மந்து ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.
பாஜக-வில் ஒருவருக்கு ஒரு பதவி என கொள்கை இருப்பதால் பீகார் மாநில பாஜக தலைவர் திலிப் ஜெய்ஸ்வால் தனது அமைச்சரவை பதவியை ராஜினாமா செய்தார்.