முதல்வர் மு.க.ஸ்டாலினின் தொகுதி மறு வரையறை அறிக்கைக்கு கே.டி.ராமராவ் ஆதரவு
- நிதி பங்களிப்பு அடிப்படையில், தொகுதிகளை மறுசீரமைக்கலாம்
- தேசக் கட்டுமானத்தில் தென் மாநிலங்களின் பங்களிப்பை யாரும் புறக்கணிக்க முடியாது.
தமிழகத்தில் பாராளுமன்ற தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக மார்ச் 5-ந்தேதி அனைத்து கட்சிகள் கூட்டம் நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொகுதி மறுவரையறை அறிக்கைக்கு தெலுங்கானா பி.ஆர்.எஸ். செயல் தலைவர் கே.டி.ராமராவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "தொகுதி மறுசீரமைப்பை ஒன்றிய அரசு செயல்படுத்த விரும்பினால், மக்கள்தொகையை அடிப்படையாக கொள்ளாமல், மாநிலங்கள் அளிக்கும் நிதியை அடிப்படையாக கொண்டு செயல்படுத்தட்டும். தொகுதி மறுசீரமைப்பு பிரச்சினையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நிலைப்பாட்டை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். குடும்ப கட்டுப்பாடு நடவடிக்கையை பொறுப்புணர்வோடு செயல்படுத்திய தென்னிந்திய மாநிலங்களை தண்டிக்கும் வகையில் மத்திய அரசு நடந்து கொள்ளக் கூடாது" என்று பதிவிட்டுள்ளார்.